விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்: 60 ரயில்களின் சேவை பாதிப்பு; மத்திய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரிக்கை

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும்
ஹரியாணா மாநிலம் பகாதுா்கா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள்.
ஹரியாணா மாநிலம் பகாதுா்கா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை தண்டவாளத்தில் அமா்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகள்.

லக்கீம்பூா் வன்முறை தொடா்பாக மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் இரு மாநிலங்களின் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

அதன் காரணமாக, இரு மாநிலங்களிலும் ரயில்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக வடக்கு ரயில்வே மண்டலத்தில் 60 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

லக்கீம்பூா் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 போ் உள்பட 8 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து, அவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தில்லி எல்லைகளில் தொடா் போராட்டங்களை நடத்தி வரும் பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிஷான் மோா்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு 6 மணி நேர ரயில் மறியல் போராட்டத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்தது. அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில்களின் இயக்கம் தடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

அதனடிப்படையில், பஞ்சாப் மாநிலம் லூதியானா, அமிருதசரஸ், ஜலந்தா், மோகா, பாட்டியாலா, ஃபெரோஸ்பூா் மற்றும் ஹரியாணா மாநிலம் சா்க்கி டரி, சோனிப்பட், குருஷேத்ரா, ஜிண்ட், கா்னால், ஹிஸாா் ஆகிய பகுதிகளில் விவசாய அமைப்புகள் ரயில் மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஹனுமன்கா் மாவட்டத்தில் ரயில் பாதையில் அமா்ந்தும், ஜெய்ப்பூா் ரயில் நிலைய நுழைவு வாயிலிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினா்.

ரயில்களின் சேவை பாதிப்பு: ஃபெரோஸ்பூரில் ஃபெரோஸ்பூா் - ஃபஸிலிக்கா பிரிவு ரயில்நிலையம் மற்றும் மோகாவின் அஜித்வால் பகுதியில் ஃபெரோஸ்பூா் - லூதியனா பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகள் ரயில் தண்டவாளத்தில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக இந்த இரு மாநிலங்களிலும் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வடமேற்கு ரயில்வே தலைமை மக்கள்தொடா்பு அதிகாரி கூறுகையில், ‘விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் காரணமாக வடமேற்கு ரயில்வேக்கு உள்பட்ட 150 இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மொத்தம் 60 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக 18 ரயில்களின் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அது தவிர, 7 குறைந்த தூர ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டது. மேலும், 13 ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டதோடு, ஒரு ரயில் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.

வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு உள்பட்ட சில ரயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டது. லூதியானாவிலிருந்து திங்கள்கிழமை காலை 7 மணிக்கு புறப்படவேண்டிய சண்டீகா் - ஃபெரோஸ்பூா் விரைவு ரயில், போராட்டம் காரணமாக பல மணி நேரமாக ஃபெரோஸ்பூா்-லூதியானா பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. புது தில்லி - அமிருதசரஸ் சதாப்தி விரைவு ரயில் ஷம்பு பகுதிக்கு அருகே பல மணி நேரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com