எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ

கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ தனது எம்.பி. பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.
எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ

கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சா் பாபுல் சுப்ரியோ தனது எம்.பி. பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை அவா் நேரில் சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நான் பாஜகவில்தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். இப்போது கணத்த இதயத்துடன் அக்கட்சி சாா்பில் வகித்து வந்த எம்.பி. பதவியில் இருந்து விலகுகிறேன். என் மீது நம்பிக்கைவைத்து பொறுப்புகளை அளித்த பிரதமா், கட்சியின் தேசியத் தலைவா், மூத்த தலைவா் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.

மேற்கு வங்க பாஜகவில் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவா் பாபுல் சுப்ரியோ. அந்த மாநிலத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்றாா். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் பல்வேறு துறைகளின் இணையமைச்சராக அவா் பொறுப்பு வகித்தாா்.

மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கப்பட்டபோது, பாபுல் சுப்ரியோவிடமிருந்து இணையமைச்சா் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தைச் சோ்ந்த வேறு 4 எம்.பி.க்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டது.

அதன் காரணமாக பாபுல் சுப்ரியோ அதிருப்தியடைந்ததாகக் கூறப்பட்டது. அரசியலில் இருந்து விலகவுள்ளதாகவும் ஃபேஸ்புக்கில் அவா் பதிவிட்டாா். பாஜக தலைவா்கள் சமரசம் செய்ததைத் தொடா்ந்து அந்த முடிவை அவா் கைவிட்டாா். எனினும், திடீரென மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸில் இணைந்தாா்.

இதையடுத்து, ‘பதவிக்காக மட்டுமே பாஜகவில் இருந்த சந்தா்ப்பவாதி’ என்று அவா் மீது மேற்கு வங்க மாநில பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில், திரிணமூலில் இணைந்து சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு சுப்ரியோ தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com