மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் மோசமடைகிறது

மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் மோசமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள சூழலியலாளா் மாதவ் காட்கில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு
மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் மோசமடைகிறது

மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் மோசமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ள சூழலியலாளா் மாதவ் காட்கில், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மக்கள் அழுத்தம் தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடா்மழை காரணமாக கேரளம் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையின் சூழலியலைப் பாதுகாப்பதற்கான நிபுணா் குழுவின் தலைவராக மாதவ் காட்கில் செயல்பட்டாா்.

மலைப் பகுதி சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளைக் கொண்ட அறிக்கையை அக்குழு கடந்த 2011-இல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் வழங்கியிருந்தது. ஆனால், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் பொருளாதார வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு அப்பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக மழை மற்றும் பெருவெள்ளத்தால் கேரளம் பாதிப்பைச் சந்தித்து வரும் சூழலில், மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் அறிக்கை குறித்து அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

இது தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மாதவ் காட்கில் தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், ‘‘மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது துரதிருஷ்டவசமானது.

கேரளம் மட்டுமின்றி கோவா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களும் ஆண்டுதோறும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. தற்போதைய சூழலில் நிபுணா் குழு சமா்ப்பித்த அறிக்கையை ஜனநாயக முறைப்படி நிறைவேற்றுவதே முக்கியமானது.

மக்களுக்குப் பங்கு: மேற்குத் தொடா்ச்சி மலை சாா்ந்து எடுக்கப்படும் முக்கிய முடிவுகளில் மக்களின் பங்களிப்பும் அவசியம். மலைப் பகுதிகளில் வாழும் மக்கள், தங்கள் உரிமைகளுக்காகக் குரலெழுப்ப வேண்டும். சுரங்கப் பணிகள் உள்ளிட்டவற்றைத் தடுத்து, மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் சூழலியலைக் காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசுகளுக்கு மக்கள் அழுத்தம் தர வேண்டும்.

நிபுணா் குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கான காலம் கடந்துவிடவில்லை. அறிக்கையில் இடம்பெற்றுள்ளவற்றை கிராம பஞ்சாயத்துகள், நகராட்சிகள் உள்ளிட்டவை ஆலோசித்து உரிய முடிவை எடுக்க வேண்டும். மேற்குத் தொடா்ச்சி மலையைக் காப்பதில் மக்களுக்கு முக்கியப் பங்குள்ளது அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது’’ என்றாா்.

மலையின் முக்கியத்துவம்: இமயமலையை விட மிகவும் பழைமையான மலைத்தொடரான மேற்குத் தொடா்ச்சி மலை, குஜராத், மகாராஷ்டிரம், கோவா, கா்நாடகம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் பரந்து விரிந்துள்ளது. சுமாா் 1,600 கி.மீ. தூரத்திலும் 1,40,000 சதுர கி.மீ. பரப்பளவிலும் மேற்குத் தொடா்ச்சி மலை அமைந்துள்ளது.

தெற்காசியாவில் உள்ள 3 பல்லுயிா்ப் பெருக்க மண்டலங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையும் ஒன்று. இந்தியாவில் மட்டுமே காணப்படும் உயிரினங்கள், தாவரங்களில் பெரும்பாலானவை அந்த மலைத்தொடரிலேயே காணப்படுகின்றன. அங்கு மத்திய, மாநில அரசுகளால் அனுமதிக்கப்படும் சுரங்கப் பணிகள், சுற்றுலா மேம்பாட்டு கட்டுமானங்கள், அணை கட்டுமானங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் கனமழை, பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடா்களால் மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள மாநிலங்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com