தில்லியிலிருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினால்...: மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விவசாயிகள் சங்கம்

காசிபூர், திக்ரி எல்லைகளிலிருந்து தில்லி காவல்துறை தடுப்புகளை அகற்றியதை தொடர்ந்து, விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தில்லி எல்லை பகுதிகளிலிருந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சித்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாரதிய கிசான் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் தானியங்களை சேகரித்து வைத்து கொள்ளும் சந்தையாக மாற்றப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "எல்லை பகுதிகளிலிருந்து விவசாயிகள் கட்டாயப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டால், அரசு அலுவலகங்கள் தானிய கிடங்காக மாற்றப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார். காசிபூர், திக்ரி எல்லைகளிலிருந்து தில்லி காவல்துறை தடுப்புகளை அகற்றியதை தொடர்ந்து, விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் நடத்த தொடங்கியதிலிருந்து கடந்த 11 மாதங்களாக இந்த சாலை மூடப்பட்டுள்ளது. இச்சாலையில் பயணம் மேற்கொள்ளும் மக்கள், சிரமத்தை சந்தித்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.

மக்கள் சந்திக்கும் சிரமத்திற்கு, சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. திக்ரி எல்லையில் சாலை திறக்கப்பட்டால், பகதுர்கர் மற்றும் தில்லியின் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கும் தேசிய தலைநகர் மற்றும் ஹரியானாவிலிருந்து ராஜஸ்தானுக்குச் செல்லும் பயணிகளுக்கும் உதவும் வகையில் அமையும்.

நவம்பர் 26, 2020 முதல் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான விவசாயிகள், திக்ரி, சிங்கு மற்றும் காசிபூர் ஆகிய இடங்களில் முகாமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த ஆண்டு இயற்றப்பட்ட மூன்று சட்டங்களும் தங்கள் நலனுக்கு எதிரானவை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறி வரும் நிலையில், இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என மத்திய அரசு கூறி வருகிறது.

மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சு வார்த்தை நடந்தாலும் பிரச்னையை தீர்ப்பதில் முட்டுக்கட்டையே நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com