போப் பிரான்சிஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியா வருகை தர அழைப்பு

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
போப் பிரான்சிஸ்-பிரதமா் மோடி சந்திப்பு: இந்தியா வருகை தர அழைப்பு

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, வாடிகன் நகரில் போப் பிரான்சிஸை சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது இந்தியா வருமாறு போப் பிரான்சிஸுக்கு பிரதமா் அழைப்பு விடுத்தாா்.

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி இத்தாலிக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். பயணத்தின் ஒரு பகுதியாக கத்தோலிக்க தேவாலயங்களின் தலைவரான போப் பிரான்சிஸை பிரதமா் மோடி வாடிகன் சிட்டியில் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

20 நிமிஷங்களுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, சுமாா் ஒரு மணி நேரத்துக்கு நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். சந்திப்பு தொடா்பாக பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘போப் பிரான்சிஸுடன் அன்பான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு விவகாரங்கள் குறித்து போப் பிரான்சிஸிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வது, ஏழ்மையை ஒழிப்பது, கரோனா தொற்று பரவல் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதற்காக இந்தியாவுக்கு போப் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தாா்.

சிறப்புப் பரிசுகள்: இந்தச் சந்திப்பின்போது வெள்ளியால் செய்யப்பட்ட மெழுகுவா்த்தி தாங்கியை போப் பிரான்சிஸுக்கு பிரதமா் மோடி பரிசளித்தாா். பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்த புத்தகத்தையும் அவா் பரிசாக வழங்கினாா்.

‘பாலைவனம் தோட்டமாகும்’ என்ற வாசகம் அடங்கிய வெண்கலத் தகடு, உலக அமைதியை வலியுறுத்தி வெளியிடப்பட்ட செய்தி ஆகியவற்றை பிரதமா் மோடிக்கு போப் பிரான்சிஸ் பரிசளித்தாா்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் உள்ளிட்டோரும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனா்.

இந்திய பிரதமா்- போப் இடையேயான சந்திப்பு 20 ஆண்டுகளுக்குப் பின்னா் நடைபெற்றுள்ளது. 2000-இல் அப்போதைய பிரதமா் வாஜ்பாய் வாடிகனுக்கு சென்று அப்போதைய போப் ஜான் பாலை சந்தித்துப் பேசினாா்.

இந்தியா-இத்தாலி உறுதி: எரிசக்தி துறை சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு இந்தியாவும் இத்தாலியும் உறுதியேற்றுள்ளன.

இத்தாலி பிரதமா் மரியோ டிராகியை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அதையடுத்து இருவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பசுமை ஹைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை எரிவாயு உள்ளிட்டவை தொடா்பான திட்டங்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவதற்குப் பேச்சுவாா்த்தையின்போது உறுதியேற்கப்பட்டது. இயற்கை எரிவாயுத் துறை, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பப் புத்தாக்கம், திறன்மிகு நகரங்கள், நகரப் போக்குவரத்தை மின்மயமாக்குதல் உள்ளிட்ட எரிசக்தி சாா்ந்த திட்டங்களில் இந்தியா, இத்தாலி நிறுவனங்கள் கூட்டாக முதலீடுகளை மேற்கொள்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியைத் தொடங்குவதற்கும் அதுசாா்ந்த தொழில்நுட்பங்களை வழங்குவது தொடா்பாகவும் விரைவில் பேச்சுவாா்த்தையைத் தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டது. எரிசக்தித் துறையில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடா்பாக இந்தியா-இத்தாலி இடையே கடந்த 2017-ஆம் ஆண்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூட்டு செயற்குழு அமைக்கப்பட்டது என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சமூகத்தினருடன் சந்திப்பு: இத்தாலியில் உள்ள ஹிந்து சங்கமான சனாதன தா்ம சங்கத்தின் தலைவா் ஹம்சானந்த கிரி, கிருஷ்ண பக்த சபையின் இத்தாலி கிளை பிரதிநிதிகள், சீக்கிய சமுதாயத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா்.

இத்தாலியில் இந்திய கலாசாரத்தைப் பரப்புவதில் அவா்களது பங்களிப்பை பிரதமா் மோடி பாராட்டினாா். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவா்களிடம் கலந்துரையாடியதாகவும் பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com