ஜனநாயகம் பலவீனப்பட்டிருக்கும் சமயத்தில் வல்லபாய் படேலை நினைவுகூர்வது முக்கியம்: ராகுல் காந்தி

விவசாயிகளின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் குரல் கொடுத்தவர் 'இரும்பு மனிதர்' சர்தால் வல்லபாய் படேல் என பிரியங்கா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
ராகுல்காந்தி
ராகுல்காந்தி

நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான இன்று காங்கிரஸ் கட்சி சார்பாக அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் தூண்கள் பலவீனப்பட்டிருக்கும் சமயத்தில் வல்லபாய் படேலின் பங்களிப்பை நினைவுகூர்வது முக்கியம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர், "இன்று நமது ஜனநாயகத்தின் தூண்கள் அனைத்தும் வலுவிழந்து கொண்டிருக்கும் போது, ​​சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை நாம் நினைவுகூர வேண்டும். இந்தத் தூண்களைக் கட்டிய காங்கிரஸ் தலைவர்களில் அவர் ஒரு முக்கியமான குரலாக இருந்தார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே சர்தார் படேலுக்குச் செய்யும் உண்மையான மரியாதை" என பதிவிட்டுள்ளார்.

வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, "பர்தோலி சத்தியாகிரகத்தில் விவசாயிகளின் உரிமைக்காகவும் சுயமரியாதைக்காகவும் குரல் கொடுத்தவர் 'இரும்பு மனிதர்' சர்தால் வல்லபாய் படேல். அவரது போராட்டம், விவசாயிகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் நீதிக்காகப் போராடும் பாறையைப் போல நிற்கத் தூண்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவை ஒற்றுமையாக வைத்து கொள்ள மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில், வெறுப்புக்கு எதிராக அன்பை வெற்றி கொள்ளவைக்கும் இந்த போராட்டத்தில், நமது விவசாயிகள், மக்கள், நாட்டை பாதுகாக்க மேற்கொள்ளப்படும் இந்த போராட்டத்தில் பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேலை இன்றும் என்றும் நினைவு கூற வேண்டும்" என பதிவிடப்பட்டுள்ளது.

தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பைப் மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் அரசின் அர்ப்பணிப்பை வளர்ப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும் மத்திய அரசு அக்டோபர் 31 ஆம் தேதியை "தேசிய ஒற்றுமை தினம்" என்று கொண்டாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com