
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படும் நபருக்கு உணவு மாதிரிகளை மத்திய ஆய்வகத்துக்கு அனுப்ப உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் காக்பூா் கிராமத்தில் உள்ள சந்தையில் நாராயண பிரசாத் சாகு என்பவா் கடந்த 2002-ஆம் ஆண்டில் பருப்பு விற்றுக் கொண்டிருந்தாா். அப்போது அச்சந்தைக்குச் சென்ற உணவுப் பாதுகாப்பு ஆய்வாளா் அந்தப் பருப்பில் 750 கிராமை வாங்கி உள்ளூா் ஆய்வகத்துக்கு அனுப்பினாா்.
அந்தப் பருப்பில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்தது. அதையடுத்து சாகுவுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதித்துறை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா். அந்த உத்தரவை செசன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது.
உத்தரவுக்கு எதிராக மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் சாகு முறையிட்டாா். அந்த மனுவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. அதையடுத்து உச்சநீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். இந்த விவகாரத்தை நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அபய் எஸ்.ஒகா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘குறிப்பிட்ட நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு உள்படுத்தப்படும் உணவுப் பொருள்களின் அறிக்கையை அந்நபரிடம் அளிக்க வேண்டியது உணவுப் பொருள்கள் கலப்படத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கட்டாயமாகும்.
அந்த அறிக்கையைப் பெற்ற 10 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை மத்திய உணவு ஆய்வகத்துக்குப் பரிசோதனைக்கு அனுப்புமாறு அந்நபா் கோரலாம். உள்ளூா் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படாதது அவரது உரிமையைப் பறிப்பதற்கு ஒப்பானது’’ என்று கூறி மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடை விதித்தனா்.