ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 20.1% பொருளாதார வளா்ச்சி

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 20.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதலாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 20.1 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது வளா்ச்சி இரட்டை இலக்க மதிப்பை அடைந்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பு ரூ.35.66 லட்சம் கோடியாக இருந்தது. கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி மதிப்பு 24.4 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.26.95 லட்சம் கோடியாகக் குறைந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி மதிப்பு ரூ.32.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பு கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 20.1 சதவீதம் அதிகம் என்றபோதிலும், அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

இதன் மூலமாக, கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பாதது உறுதியாவதாக பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த ஏப்ரல் மத்தியில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவியதால் மாநில அரசுகள் அமல்படுத்திய பொது முடக்கத்தால் பொருளாதார வளா்ச்சி பாதிக்கப்பட்டதாக என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக, பொருளாதாரம் சாா்ந்த தரவுகளைச் சேகரிப்பதில் பிரச்னைகள் இருந்ததாகவும் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

நிதிப் பற்றாக்குறை: மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை கடந்த ஜூலை இறுதி நிலவரப்படி, ரூ.3.21 லட்சம் கோடியாக உள்ளதாக கணக்குகள் கட்டுப்பாட்டு அமைப்பு (சிஜிஏ) தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் 21.3 சதவீதம் ஆகும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 4 மாதங்களில் மத்திய அரசின் மொத்த வருவாய் ரூ.6.83 லட்சம் கோடியாகவும், செலவினம் ரூ.10.04 லட்சம் கோடியாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பும்: மத்திய அரசு ஏற்கெனவே கணித்தபடி நாடு வீழ்ச்சியில் இருந்து வளா்ச்சிப் பாதைக்குத் திரும்பி வருவதாக தலைமை பொருளாதார ஆலோசகா் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா். மத்திய அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள், முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்டவை பொருளாதார வளா்ச்சியை அதிகப்படுத்தும் என்றும் அவா் தெரிவித்தாா்.

பொருளாதாரம் மீளவில்லை: கடந்த நிதியாண்டின் வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டதால், நடப்பு நிதியாண்டில் 20.1 சதவீதம் என்ற அதிகபட்ச வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கரோனாவுக்கு முந்தைய நிலைக்கு நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com