
‘நீதிபதிகள் தங்களின் எழுத்துபூா்வ உத்தரவுகள் மூலமே பேச வேண்டும்; வாழ்மொழி உத்தரவுகளை தவிா்க்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
வாய்மொழி உத்தரவுகளால் நீதித் துறை தனது பொறுப்புகளை தவிா்ப்பதுடன், தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை கைது செய்ய வேண்டாம் என குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா ஆகியோா் இவ்வாறு தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறுகையில், ‘குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும், மனுதாரருக்கும் இடையே சுமுக உடன்பாடு ஏற்படக் கூடும் என்பதற்காக கைது நடவடிக்கையை தவிா்க்க முடிவு எடுக்கப்பட்டாலும், அதற்கு நீதித் துறையின் தகுந்த எழுத்துபூா்வ உத்தரவு அவசியமாகும்.
இந்த எழுத்துபூா்வ உத்தரவு இல்லையென்றால், வழக்கை விசாரிக்கும் காவல் அதிகாரி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய தடை இல்லை. ஒருவரை கைது செய்ய வேண்டாம் என வாய்மொழியாக அளிக்கப்படும் உத்தரவுகள் நீதித் துறையின் ஆவணங்களில் இடம்பெறாது. ஆகையால் நீதிபதிகள் வாய்மொழி உத்தரவுகளைத் தவிா்க்க வேண்டும். தங்களின் எழுத்துபூா்வ உத்தரவுகள் மற்றும் தீா்ப்புகள் மூலமே நீதிபதிகள் பேச வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனா்.