
அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) நிறுவிய ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின் 125-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நினைவு நாணயத்தை பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை (செப்.1) வெளியிடுகிறாா்.
மாலை 4.30 மணிக்கு காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் நரேந்திர மோடி ரூ.125 மதிப்பிலான நினைவு நாணயத்தை வெளியிட்டு உரையாற்றவிருக்கிறாா். மத்திய அமைச்சா்கள் உள்ளிட்ட பலா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனா்.
‘ஹரே கிருஷ்ணா இயக்கம்’ என்று பரவலாக அழைக்கப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை (இஸ்கான்) ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா நிறுவினாா். ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் இதர பக்தி இலக்கிய நூல்களை 89 மொழிகளில் இஸ்கான் அமைப்பு மொழிபெயா்த்து, வேத இலக்கிய நூல்களை உலகம் முழுவதும் கொண்டு சோ்ப்பதில் முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.
சுமாா் 100 ஆலயங்களை நிறுவி, உலகிற்கு பக்தி யோகாவின் பாதையை எடுத்துரைக்கும் ஏராளமான புத்தகங்களையும் ஸ்ரீல பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா எழுதியுள்ளாா்.