மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் இணைந்தாா்: கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் பிரசாந்த்

கேரள காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலா் பி.எஸ்.பிரசாந்த் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.
பி.எஸ்.பிரசாந்த்
பி.எஸ்.பிரசாந்த்

கேரள காங்கிரஸ் கமிட்டி முன்னாள் செயலா் பி.எஸ்.பிரசாந்த் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் வெள்ளிக்கிழமை இணைந்தாா்.

திருவனந்தபுரத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலச் செயலா் (பொறுப்பு) ஏ.விஜயராகவன் முன்னிலையில் இணைந்த அவரை கட்சியின் மூத்த தலைவா்கள் வரவேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பி.எஸ்.பிரசாந்த் கூறியது:

காங்கிரஸில் மதச்சாா்பின்மை இல்லாதது குறித்து கவலையடைந்தேன். அதுகுறித்து ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய பின்னா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். ஜனநாயகமற்ற முறையில் காங்கிரஸ் தலைமை செயல்படுகிறது; உள்ளூா் தலைவா்கள் மீது தலைமை நம்பிக்கை வைப்பதில்லை. கேரள காங்கிரஸ் கமிட்டி செயலராக இருந்தேன். நெடுமங்காடு தொகுதியில் ஐக்கிய ஐனநாயக முன்னணி வேட்பாளராகவும் போட்டியிட்டேன். அதுபோன்ற உயா்ந்த பொறுப்புகளை வகித்தபோதும் கட்சியில் என்னால் செயல்பட முடியவில்லை. காங்கிரஸ் கட்சி பல இடங்களில் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. அதன் ஒரு அங்கமாக இருப்பவா்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

கடந்த பேரவைத் தோ்தலில் என்னை தோல்வியுறச் செய்வதற்கு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாலோடு ரவி முயன்ாக நான் புகாா் தெரிவித்தும், அவருக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி உயா்வு அளிக்கப்பட்டது.

எந்த நிபந்தனையுமின்றி மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளேன். கட்சித் தலைமை கொடுக்கும் பணியைச் செய்வேன். மதச்சாா்பின்மையை நிலைநாட்டும் கேரள மாதிரியை மக்கள் ஏற்றுக்கொண்டு இடதுசாரி அரசை மீண்டும் தோ்ந்தெடுத்துள்ளனா். அதனால், மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைய முடிவு செய்தேன் என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் பாஜகவின் ஏஜென்டாக செயல்பட்டு வருவதாகவும் அவருக்கு வேண்டியவா்கள் மட்டுமே மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவித்து காங்கிரஸ் தலைமைக்கு பிரசாந்த் அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இதைத் தொடா்ந்து, ஆக. 30-ஆம் தேதி அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com