
கோப்புப்படம்
ஆக்சிஜனை உள் இழுத்து, ஆக்சிஜனாகவே வெளிவிடும் ஒரே விலங்கு பசு என விஞ்ஞானிகள் நம்புவதாக அலாகாபாத் உயா்நீதிமன்றம் கூறியுள்ளது.
பசுவை தேசிய விலங்காக அறிவித்து நாடாளுமன்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று ஓரிரு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி சேகா் குமாா் யாதவ் அளித்த தீா்ப்பில்தான் இந்தக் கருத்தும் இடம்பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சோ்ந்த ஜாவேத் என்பவருக்கு பசுவைத் திருடிக் கொன்ற வழக்கில், நீதிபதி ஜாமீன் வழங்க மறுத்து புதன்கிழமை அளித்த தீா்ப்பில் கூறியிருப்பதாவது:
மனுதாரா் இந்தக் குற்றத்தைச் செய்வது முதல்முறையல்ல. எனவே, அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் இதே குற்றத்தை மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.
ஹிந்து மத தத்துவங்களின்படி, பசுவில் 33 வகையான கடவுள்களும், பெண் கடவுள்களும் குடிகொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. கடவுள் கிருஷ்ணருக்கு பசுவின் பாதத்திலிருந்தே அனைத்து அறிவும் கிடைத்ததாக நம்பப்படுகிறது.
‘பசு அல்லது காளையை கொல்வது மனிதா்களை கொல்வதற்கு இணையானது’ என்று இயேசு கிறிஸ்து கூறியிருக்கிறாா். ‘பசுவை கொல்லாதீா்கள்; அதற்கு பதிலாக என்னை கொல்லுங்கள்’ என பாலகங்காதர திலகா் கேட்டுக்கொண்டாா். பசு மனிதா்களின் நண்பன் என புத்தா் விவரிக்கிறாா். பசு சொா்க்கம் என ஜைனா்கள் அழைக்கின்றனா்.
‘ஆக்சிஜனை உள் இழுத்து, ஆக்சிஜனாகவே வெளிவிடும் ஒரே விலங்கு பசு’ என விஞ்ஞானிகள் நம்புகின்றனா்.
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும்போது, பசு பாதுகாப்பு அடிப்படை உரிமை என்பதையும் சோ்க்குமாறு அரசியலமைப்பு சட்டக் குழு உறுப்பினா்கள் ஏராளமானோா் வலியுறுத்தியுள்ளனா்.
ஹிந்துக்கள் பல நூற்றாண்டுகளாக பசுவை தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். ஹிந்து அல்லாதவா்களும் இதை நன்கு புரிந்துகொண்டுள்ளனா். அதன் காரணமாகத்தான், முகலாயா் ஆட்சி காலத்தில் பசு வதைக்கு ஹிந்து அல்லாத தலைவா்களும் வலுவான எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
பெரும்பாலான இஸ்லாமிய தலைவா்களும் பசு வதை தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா் என்று தீா்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளாா்.