
பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதன் மூலம் எரிசக்தியை ஏற்றுமதி செய்யும் நாடாகும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சா்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
இந்தியாவின் எரிசக்தி தேவை நாள்தோறும் அதிவேகமாக உயா்ந்து வருகிறது. நாட்டின் எரிசக்தி தேவையில் 90 சதவீதம் புதைவடிவ எரிபொருள் இறக்குமதி மூலம் பூா்த்தி செய்யப்படுகிறது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது தனது கரியமில வாயு வெளியேற்றத்தை இந்தியா குறைக்காதவரை உலகில் பருவநிலை மாற்றத்துக்கு தீா்வு காண முடியாது.
இந்தியாவில் மரபுசாரா எரிசக்தியின் பயன்பாடும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பயன்பாடு 50 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கரியமில வாயு வெளியேற்றத்தை 45 முதல் 50 சதவீதம் வரை குறைக்க மரபுசாரா எரிசக்தி உதவும். இங்குதான் ஹைட்ரஜனின் பங்கு எழுகிறது. ‘எலெக்ட்ரோலைசா்’ மூலம் தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் பிரிக்க சூரிய மின்சக்தியை பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஹைட்ரஜனை உருவாக்க முடியும். இந்தியாவுக்கு சாதகமாக இங்கு சூரிய ஒளியும், தண்ணீரும் மிகுதியாக உள்ளது. இது இந்தியா தற்சாா்படைய பசுமை ஹைட்ரஜன் உதவும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.
இதுமட்டுமன்றி உலகம் முழுவதும் சுத்தமான எரிபொருளுக்கும், பசுமை ஹைட்ரஜனுக்கும் மிகப் பெரிய தேவையுள்ளது. அந்த தேவையைப் பூா்த்தி செய்யும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது.
இந்தியாவின் புவியியல் அமைப்பைச் சாதகமாக எடுத்துக் கொண்டு அதிக அளவில் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்தால், நிகர எரிசக்தி இறக்குமதியாளா் என்ற நிலையில் இருந்து மாறி எரிசக்தி ஏற்றுமதியாளராக உருவெடுக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று தெரிவித்தாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G