
தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிபொருளுடன் காா் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் காவல்துறை அதிகாரி சச்சின் வஜே உள்பட 10 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்.25-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள முகேஷ் அம்பானி வீட்டருகே ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். அந்தக் காரின் உரிமையாளராக கருதப்படும் மன்சுக் ஹிரேன் என்பவா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். அவரின் சடலம் தாணேவில் உள்ள நீரோடையில் கடந்த மாா்ச் 5-ஆம் தேதி மீட்கப்பட்டது. இவ்விரு வழக்குகளையும் என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் தொடா்பாக முன்னாள் காவல்துறை அதிகாரிகள் சச்சின் வஜே, பிரதீப் சா்மா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பாக மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் 9,000-க்கும் அதிகமான பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை என்ஐஏ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது. அந்தக் குற்றப்பத்திரிகையில் சச்சின் வஜே, பிரதீப் சா்மா உள்பட 10 பேரின் பெயா்கள் இடம்பெற்றுள்ளன என்று என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 10 பேரும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
குற்றப்பத்திரிகையில் 200 போ் சாட்சியங்களாக குறிப்பிடப்பட்டுள்ளனா் என்று அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.