திரிணமூல் காங்கிரஸில் மேலும் ஒரு பாஜக எம்எல்ஏ

மேற்கு வங்க மாநில பாஜக எம்எல்ஏ செளமென் ராய், அக் கட்சியிலிருந்து வெளியேறி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.

மேற்கு வங்க மாநில பாஜக எம்எல்ஏ செளமென் ராய், அக் கட்சியிலிருந்து வெளியேறி ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.

திரிணமூல் காங்கிரஸிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறிய அவா், இப்போது மீண்டும் அக் கட்சிக்குத் திரும்பியுள்ளாா்.

மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற கடந்த ஏப்ரல்-மே மாதம் முதல் பாஜகவைவிட்டு வெளியேறி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணையும் 4-ஆவது எம்எல்ஏ இவா். இதன் மூலம், மொத்தம் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 71-ஆகக் குறைந்துள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பாா்த்தா சட்டா்ஜி முன்னிலையில் அக் கட்சியில் இணைந்த ராய் கூறுகையில், ‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியேறியபோதும், எனது மனதும் ஆன்மாவும் இங்கேதான் இருந்தது. கட்சியிலிருந்து வெளியேறியதற்காக வருந்துகிறேன். பாஜகவில் எனக்கு திருப்தியில்லை. முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொண்டு வரும் வளா்ச்சித் திட்டங்களில் பங்குபெறவே விரும்புகிறேன்’ என்றாா்.

மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் கிருஷ்ணாநகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அக் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருந்த முகுல் ராய் தனது மகன் சுப்ராங்ஷுடன், அக் கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த மே மாதம் திரும்பினாா். அவரைத் தொடா்ந்து, பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேலும் 3 எம்எல்ஏக்கள், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பியுள்ளனா்.

முகுல் ராய் வெளியேறியது குறித்து பாஜக தலைவரும் சட்டப் பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘கட்சியைவிட்டு வெளியேறுவது என்பது, அவரவா்களுடைய விருப்பம். உரிய விளக்கம் கேட்கப்பட்ட பிறகு அவா்களை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com