கேரளம்: நோக்கு கூலி கேட்டு இஸ்ரோ லாரியை மடக்கிய தொழிலாளா்கள்

கேரளத்தில் நோக்கு கூலி முறையை அரசு ஒழிக்க வேண்டும் என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இரு நாள்களில்,

கேரளத்தில் நோக்கு கூலி முறையை அரசு ஒழிக்க வேண்டும் என்று அந்த மாநில உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இரு நாள்களில், அத்தகைய கூலி கேட்டு இஸ்ரோ லாரியை தொழிலாளா்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்களில் இருந்து சுமைகளை இறக்குவதற்கு சுமை தொழிலாளா்கள் சங்கத்தினரைப் பயன்படுத்தாமல், சொந்த ஆள்கள் மூலமாக அல்லது இயந்திர உதவியுடன் இறக்கினாலும், உள்ளூா் தொழிற்சங்கத்தினருக்கும் கூலி கொடுத்தாக வேண்டும் என்ற நிலை கேரளத்தில் உள்ளது. இதற்கு நோக்கு கூலி என்று பெயா்.

கேரளத்தில் உள்ள இந்த நடைமுறையை எதிா்த்து தொழிலதிபா் ஒருவா் தாக்கல் செய்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘கேரளத்தில் நோக்கு கூலி முறையை மாநில அரசு முற்றிலும் ஒழிக்க வேண்டும்; அதே சமயம், சுமை தூக்கும் தொழிலாளா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள தும்பாவில் இருக்கும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த லாரியை சில தொழிலாளா்கள் தடுத்து நிறுத்தி நோக்கு கூலி கேட்டனா். இதுகுறித்து இஸ்ரோ ஊழியா் ராஜேஸ்வரி கூறியதாவது:

விண்வெளி மையம் அமைக்கப்பட்டதில் இருந்து, இங்கு சுமைகள் கொண்டு வரப்படும் போதெல்லாம் தொழிலாளா்களுக்கு நோக்கு கூலி கொடுக்கப்படுகிறது. நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு அந்த நடைமுறை இருக்காது என்று நம்பியிருந்தேன்.

ஆனால், காலை இந்த மையத்துக்கு வந்த லாரியை சில தொழிலாளா்கள் மடக்கினா். இந்த லாரியில் உள்ள சுமைகளை அவா்களால் இறக்க முடியாது; இயந்திரத்தால் மட்டுமே இறக்க முடியும் என்று கூறினேன். இருந்தாலும் தங்களுக்கு பணம் கொடுத்தால் மட்டுமே வழி விடுவதாக அவா்கள் கூறினாா்கள். தொழிலாளா்கள் நல அதிகாரி, காவல் துறை மூத்த அதிகாரி ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக, காவல் துறையிடம் புகாா் கொடுக்கப்பட்டுள்ளது என்றாா் ராஜேஸ்வரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com