பலியான சிறுவனுக்கு நிபா பரிசோதனை செய்ய 3 முக்கிய காரணங்கள்

அதனால்தான் அந்த பரிசோதனையை மேற்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலியான சிறுவனுக்கு நிபா பரிசோதனை செய்ய முடிவெடுத்தது ஏன்? மருத்துவர்கள் விளக்கம்
பலியான சிறுவனுக்கு நிபா பரிசோதனை செய்ய முடிவெடுத்தது ஏன்? மருத்துவர்கள் விளக்கம்


நிபா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 12 வயது சிறுவனின் உடலில் ஏற்பட்ட மூன்று முக்கிய பிரச்னைகள்தான், அவனுக்கு நிபா வைரஸ் தாக்கியிருக்குமோ என்று சந்தேகிக்க வைத்ததாகவும், அதனால்தான் அந்த பரிசோதனையை மேற்கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பழந்தின்னி வெளவால்களின் உமிழ்நீா் மூலம் நிபா தீநுண்மி பரவுகிறது. இந்த வைரஸ்  தென்னிந்தியாவில் முதன்முதலாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 17 போ் நிபா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனா். அதன் பிறகு அந்தத் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அந்தத் வைரஸ் கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அந்தத் வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.

ஆஸ்டர் மிம்ஸ் மருத்துவமனையில் சிறுவன் செப்டம்பர் 1ஆம் தேதி அனுமதிக்கப்பட்டான். அப்போது அவனுக்கு தீவிர மூளைக் காய்ச்சல், வலிப்பு மற்றும் இதயப் பிரச்னை இருந்தது கண்டறியப்பட்டது.

குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவ நிபுணர் டாக்டர் சதீஷ் குமார் கூறுகையில், கடுமையான காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர மூளைக் காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அவரது உடல் வெப்பநிலை 104 முதல் 105 ஃபாரன்ஹீட் என்ற அளவிலேயே இருந்தது. இதய துடிப்பும் அதிகமாக இருந்தது. நுரையீரல் பாதித்து, ஆக்ஸிஜன் அளவும் குறைந்து கொண்டே வந்தது. இதனால்தான் அவனுக்கு நிபா வைரஸ் தாக்கியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

செப்டம்பர் 2ஆம் தேதி பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்களின் கூட்டம் நடத்தப்பட்டு, சிறுவனுக்கு நிபா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அவனது மாதிரிகள் வாகனம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு 9.30க்கு அவனுக்கு நிபா இருப்பது தொலைபேசி மூலம் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். சிறுவனுக்கு நினைவு திரும்பவேயில்லை. மருந்துகளையும் சிகிச்சையையும் அவனது உடல் ஏற்கவில்லை.

நிபா உறுதி செய்யப்பட்ட பிறகு, தங்களது ஒரேயொரு மகனை, அவனது பெற்றோர் சனிக்கிழமை இரவு கண்ணாடி வழியாகப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘‘கோழிக்கோட்டில் உள்ள சாத்தமங்கலத்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் 4 நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தான். சிறுவனிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கு மாதிரிகளை பரிசோதித்ததில் நிபா தீநுண்மியால் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

சிறுவனுடன் தொடா்பிலிருந்தவா்களை கண்காணிப்புக் குழு அடையாளம் கண்டுள்ளது. அவா்களில் 20 போ் தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் அவா்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. அந்த 20 பேரில் இருவருக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் மருத்துவப் பணியாளா்கள். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அருகிலுள்ள கண்ணூா், மலப்புரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

சிறுவனின் உடலை 12 அடி ஆழத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடக்கம் செய்தனா். இதனிடையே சிறுவனுடைய தாயாருக்கு ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியானது.

சிறுவனுக்கு காய்ச்சல் தென்பட்டது முதல் இறந்ததுவரை ‘‘வழித்தட வரைபடம்’’ உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நிபா பரவலைக் கண்காணிக்க பொதுமக்களுக்கும் உதவும் பொருட்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com