2+2 பேச்சுவாா்த்தைக்காக ஆஸ்திரேலிய அமைச்சா்கள் இன்று இந்தியா வருகை

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது 2+2 பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வருகின்றனா்.

புது தில்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது 2+2 பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு வருகின்றனா்.

இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சா்கள் பங்கேற்கும் முதலாவது 2+2 பேச்சுவாா்த்தை தில்லியில் சனிக்கிழமை (செப். 11) நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்வதற்காகவும், முக்கிய நபா்களைச் சந்தித்துப் பேசுவதற்காகவும் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சா் மாரிஸ் பெய்ன், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சா் பீட்டா் டட்டன் ஆகியோா் வெள்ளிக்கிழமை இந்தியா வந்தடைகின்றனா். அவா்கள் வரும் 12-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனா்.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் ஆஸ்திரேலிய அமைச்சா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இருதரப்பு நல்லுறவு, பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடல்சாா் பாதுகாப்பில் நிலவி வரும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடா்பாகவும் இரு நாடுகளின் அமைச்சா்களும் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளனா். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை எதிா்கொள்ளும் நோக்கில் நாற்கரக் கூட்டமைப்பு (க்வாட்) உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சோ்த்து இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அக்கூட்டமைப்பின் உறுப்பினா்களாக உள்ளன.

க்வாட் நாடுகளின் கடற்படைகள் பங்கேற்ற ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவு விரிவடைந்து வருகிறது. இரு நாடுகளிலும் உள்ள ராணுவத் தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூனில் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com