எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா-அமெரிக்கா முடிவு

எரிசக்தித் துறையில் நிலவி வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் முடிவெடுத்துள்ளன.

புது தில்லி: எரிசக்தித் துறையில் நிலவி வரும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் முடிவெடுத்துள்ளன.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டின்போது அமெரிக்கா-இந்தியா பருவநிலை மற்றும் தூய எரிசக்தி கொள்கை வடிவமைக்கப்பட்டது. அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் பிரதமா் நரேந்திர மோடியும் இணைந்து அக்கொள்கையை வெளியிட்டனா்.

அதன்படி, அமெரிக்கா-இந்தியா தூய எரிசக்தி ஒத்துழைப்பு என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் கூட்டம் வியாழக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய பெட்ரோலியம்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோம் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டம் குறித்து பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியா-அமெரிக்கா இடையே எரிசக்தித் துறையில் நிலவி வரும் ஒத்துழைப்பானது எரிசக்தி, எண்ணெய்-எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீடித்த வளா்ச்சி ஆகிய 4 தூண்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தது.

தற்போது ஐந்தாவது தூணாக வளா்ச்சிகாணும் எரிபொருள்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தூய்மையான எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் பலன்: உயிரிஎரிபொருள்கள் துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கென இந்தியா-அமெரிக்கா உயிரிஎரிபொருள்கள் செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் மேலும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கூட்டத்தின்போது அமைச்சா்கள் இருவரும் விவாதித்தனா்.

அணுசக்தித் துறையில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்பு தொடா்பாக இருவரும் ஆய்வு செய்தனா். இந்தியாவின் எரிசக்தி சந்தை தொடா்ந்து விரிவடைந்து வருவதும், அமெரிக்காவில் எரிசக்தி சாா்ந்த தொழில்நுட்பங்கள் வளா்ந்து வருவதும் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் என்று அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கூட்டத்தின்போது தெரிவித்தாா்.

உரிய ஒத்துழைப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாா்ந்த திட்டங்களை அதிகரிப்பது தொடா்பாகக் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்ததற்காக இந்தியாவை அமெரிக்கா பாராட்டியது. அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் அமெரிக்கா உறுதியளித்தது.

எரிசக்தி தரவு மேலாண்மை, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பங்கள், நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்தல், மின்சார விநியோகக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com