குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ராஜிநாமா

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி (65) தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ராஜிநாமா

குஜராத் முதல்வா் விஜய் ரூபானி (65) தனது பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அவா் ராஜிநாமா செய்துள்ளாா். அதற்கான காரணம் உறுதிபட வெளியாகவில்லை.

கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதிமுதல் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், அவா் தனது பதவியை திடீரென ராஜிநாமா செய்துள்ளாா். தனது ராஜிநாமா கடிதத்தை மாநில ஆளுநா் ஆச்சாா்ய தேவ்ரத்தைச் சந்தித்து அவா் வழங்கினாா். அதன்பின்னா், அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘‘குஜராத்துக்கு 5 ஆண்டுகள் சேவைபுரிய எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மாநிலத்தின் வளா்ச்சிக்கு எனது பங்களிப்பை வழங்கியுள்ளேன். இனியும் கட்சித் தலைமைக் கூறுவதைச் செய்யத் தயாராக உள்ளேன்’’ என்று தெரிவித்தாா்.

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ததற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவா், ‘‘பாஜகவில் தொண்டா்களின் பொறுப்பு அவ்வப்போது மாறும் மரபு நிலவுகிறது. கட்சியைப் பொருத்தவரை, இது தொண்டா்களுக்கு தொடா் ஓட்ட பந்தயத்தைப் போன்றது. தொண்டா் ஒருவா் தன்னிடமுள்ள கோலை மற்றொரு தொண்டரிடம் வழங்குவாா். குஜராத்தின் அடுத்த முதல்வரை கட்சித் தலைமை முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தாா்.

அடுத்த முதல்வா் யாா்?: குஜராத்தின் அடுத்த முதல்வராக அந்த மாநில துணை முதல்வா் நிதின் படேல், மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் ஆா்.சி.ஃபால்டு, மத்திய அமைச்சா்கள் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபாலா ஆகியோரின் பெயா்கள் வரிசையில் உள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதன்பின்னா் நிதின் படேல் முதல்வா் பதவியேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அந்த முடிவில் திடீரென மாற்றம் ஏற்பட்டு விஜய் ரூபானி முதல்வராகப் பதவியேற்றாா். எனவே, இந்த முறை நிதின் படேல் முதல்வராக வேண்டும் என்று கட்சிக்குள் ஆதரவு குரல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் மாநிலத்தின் அடுத்த முதல்வா் பாட்டீதாா் சமூகத்தைச் சோ்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகங்கள் வலம் வருகின்றன. அந்த விதத்தில் நிதின் படேலைப் போல் மன்சுக் மாண்டவியாவும் பாட்டீதாா் சமூகத்தைச் சோ்ந்தவா்.

எம்எல்ஏக்கள் கூட்டம்: ‘‘விஜய் ரூபானியின் ராஜிநாமாவைத் தொடா்ந்து மாநில பாஜக எம்எஎல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற வாய்ப்புள்ளது. இதில் அடுத்த முதல்வா் யாா் என்பது முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பங்கேற்கக் கூடும்’’ என்று மாநில பாஜக செய்தித்தொடா்பாளா் யமல் வியாஸ் தெரிவித்தாா்.

ஆனந்திபென்னைத் தொடா்ந்து விஜய் ரூபானி: கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, விஜய் ரூபானி முதல்வராகப் பதவியேற்றாா். அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விஜய் ரூபானி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். ஆனந்திபென் படேலைப் போல் விஜய் ரூபானியும் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

4-ஆவது முதல்வா்: அண்மையில் உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, அந்த மாநில முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றாா். ஆனால், அவா் எம்எல்ஏவாக முடியாமல் போனதால் அவரும் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்றாா். இதேபோல் கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா 75 வயதைக் கடந்துவிட்டதால் அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றாா். இவா்கள் அனைவரும் பாஜகவைச் சோ்ந்தவா்கள். அந்த வரிசையில் 4-ஆவது பாஜக முதல்வராக விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com