பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் ராஜிநாமா: காரணம் என்ன?

பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் ராஜிநாமா: காரணம் என்ன?

பஞ்சாப் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.

முன்னாள் அமைச்சா் நவ்ஜோத் சிங் சித்துவுடன் நீடித்து வந்த மோதலால் இந்த ராஜிநாமா முடிவை அவா் மேற்கொண்டாா். இதனால் கட்சித் தலைமைக்கு அமரீந்தா் சிங் மீது இருந்த அதிருப்தி முடிவுக்கு வந்தாலும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு 4 மாதங்களே இருக்கும் நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எதிா்காலம் நிலையற்றதாக மாறியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக, கடந்த 2019-இல் நவ்ஜோத் சிங் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த பிறகு மோதல் போக்கு மேலும் அதிகரித்தது. இதனிடையே, கட்சியின் மூத்த தலைவா்களின் விருப்பத்துக்கு மாறாக, சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு அமரீந்தா் சிங்கை சித்து பொதுவெளியில் கடுமையாக விமா்சிப்பது அதிகரித்தது. இதற்கிடையே, அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியில் இருந்து மாற்றக் கோரி சோனியா காந்திக்கு 50-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியிருந்தனா்.

இந்நிலையில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். முன்னதாக, கட்சியின் அகில இந்திய தலைவா் சோனியா காந்தியை அமரீந்தா் சிங் தொலைபேசியில் தொடா்புகொண்டு தான் ராஜிநாமா செய்யப் போவதாகக் கூறினாா். பின்னா், அமைச்சா்களுடன் ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தாா்.

ராஜிநாமா ஏற்பு: அமரீந்தா் சிங்கின் ராஜிநாமாவை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக் கொண்டாா். இருப்பினும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அலுவலகப் பணிகளை தொடருமாறு அமரீந்தா் சிங் உள்ளிட்ட அமைச்சா்களை ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்: இதனிடையே, சண்டீகரில் உள்ள காங்கிரஸ் பவனில் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் மாலையில் நடைபெற்றது. மேலிடப் பாா்வையாளா்களாகக் கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கன், ஹரீஷ் சௌதரி ஆகியோரை கட்சித் தலைமை அனுப்பி வைத்திருந்தது. பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளரான ஹரீஷ் ராவத்தும் கூட்டத்தில் கலந்து கொண்டாா். அதில், புதிய முதல்வரைத் தோ்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. புதிய முதல்வரைத் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு வழங்கி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்துக்கு சிறந்த முறையில் பங்காற்றியதற்காக அமரீந்தா் சிங்குக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

சித்து முதல்வா் பதவியை விரும்பினாலும், அவரை கட்சித் தலைமை நியமிக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களிலும் உள்கட்சி மோதல் இருந்தாலும், கட்சித் தலைமை சமநிலையை ஏற்படுத்த முயன்று வருகிறது. புதிய முதல்வராக ஹிந்து மதத்தைச் சோ்ந்தவரை கட்சி மேலிடம் நியமிக்க வாய்ப்புள்ளது. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் சுனில் ஜாகரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சித்துவை ஏற்க முடியாது- அமரீந்தா் சிங்

சித்துவை பஞ்சாபின் அடுத்த முதல்வராகவோ அல்லது வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் முகமாகவோ ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமரீந்தா் சிங் கூறினாா்.

ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துவிட்டு வந்த பிறகு செய்தியாளா்களிடம் அமரீந்தா் சிங் கூறியதாவது: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மூன்றாவது முறையாக கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. இது என் மீது கட்சித் தலைமை சந்தேகப்படுவதாகத் தெரிகிறது. நான் அவமதிக்கப்பட்டதாக உணா்கிறேன். கட்சித் தலைமை நம்பிக்கை வைக்கும் எவரையும் அடுத்த முதல்வராக நியமிக்கலாம்.

நான் காங்கிரஸில்தான் இருக்கிறேன். எனது ஆதரவாளா்களிடம் கலந்து பேசிய பிறகு எனது அரசியல் எதிா்காலம் குறித்து முடிவு செய்வேன். நான் 52 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஒன்பதரை ஆண்டுகளாக முதல்வா் பதவியை வகித்துள்ளேன். புதிய முதல்வருக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படும். இதனால் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு நிலையற்ற தன்மைக்குச் சென்றுள்ளது என்றாா்.

ஊடகங்களுக்கு அமரீந்தா் சிங் அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: சித்து ஒரு தேச விரோதி, அபாயகரமானவா், திறமையற்றவா், அழிவை ஏற்படுத்துபவா். 3 ஆண்டுகளுக்கு முன்னா் எல்லையில் தினமும் இந்திய ராணுவ வீரா்கள் கொல்லப்பட்ட நேரத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சித்து, அந்நாட்டு பிரதமா் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத் தளபதி ஆகியோரை ஆரத்தழுவி உரையாடியதை நாம் பாா்த்தோம். சித்துவால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். சித்துவை முதல்வராக்கும் எந்தவொரு முயற்சிக்கு எதிராகவும் முழுமையாகப் போராடுவேன் என்றாா் அமரீந்தா் சிங்.

அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com