உலக கோப்பையில் நடந்தது என்ன? இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு நவ்ஜோத் சித்து ஆபத்தானவரா? அமரீந்தர் சொல்லும் காரணம்

1996ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை கைவிட்டவர் நவ்ஜோத் சிங் சித்து என அமரீந்தர் சிங் விமரிசித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்த நெருக்கடிகளை சந்தித்துவருகிறது. முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் விலகிய நிலையில், சரண்ஜீத் சிங் சன்னிக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டது. அமைச்சரவை அமைப்பதில் பெரும் குழப்பம் நிலவியதை தொடர்ந்து, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நவ்ஜோத் சிங் சித்து விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இப்படி தினந்தோறும் அதிரடியான அரசியல் நிகழ்வுகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், 96 உலக கோப்பை போட்டியை ஒப்பிட்டு நவ்ஜோத் சிங் சித்து மீது முன்னாள் அமரீந்தர் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மாநில தலைவர் பதவியேற்று இரண்டே மாதங்களில் அவர் அப்பொறுப்பிலிருந்து விலகியிருப்பது முழுமையான நாடகம் என அமரீந்தர் சாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வேறொரு கட்சியில் இணைய தயாராகி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அவர் ஒரு நிலையற்ற மனிதர் என்று நான் முன்பே உங்களிடம் (சோனியா காந்தி) தெரிவித்திருந்தேன். எல்லை மாநிலமான பஞ்சாப்பிற்கு அவர் பொருத்தமற்ற நபர். நேர்மையற்ற நபர்.

1996ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை கைவிட்டவர் நவ்ஜோத் சிங் சித்து. அதுதான் அவருடைய உண்மையான குணம். சிறு வயதிலிருந்து அவரை நான் அறிவேன். அணியுடன் ஒத்து போகமாட்டார். தனிமையாகவே அனைத்தையும் செய்வார்.

அவர் நிலையற்றவர். ஆபத்தானவர் என முன்பிருந்தே கூறிவருகிறேன். பஞ்சாப் மாநிலத்தை நிர்வாகம் செய்ய அவரிடம் நம்பி ஒப்படைக்க முடியாது. அரசின் அமைச்சராக பொறுப்பு வகித்த போதே, திறமையற்றவராகவே இருந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐஎஸ்ஐ தலைவர் கமார் ஜவேத் பாஜ்வா ஆகியோருடன் நெருக்கம் காட்டும் அவரால் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்" என்றார்.

புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சாப் அமைச்சரவையில் சில அமைச்சர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com