நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு

செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 
தமிழகம், புதுவையில் நிகழாண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? புதுச்சேரி அதிமுக கேள்வி
தமிழகம், புதுவையில் நிகழாண்டு நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? புதுச்சேரி அதிமுக கேள்வி


புதுதில்லி: செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வை நடத்தக் கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தத் தோ்வுக்கு தமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே எதிா்ப்பு வலுத்து வந்தது. 
இதைத் தொடா்ந்து நீட் தோ்வால் தமிழக மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்ககப்பட்டது. இந்தக் குழு மாணவா்கள், பெற்றோா்களிடம் கருத்து கேட்டும் நீட் தோ்வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து தமிழக அரசிடம் அறிக்கை சமா்ப்பித்து.

இந்தச் சூழலில் தமிழகத்தில் இந்தாண்டு நீட் தோ்வு நடைபெறுமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் 2021-22-ஆம் கல்வி ஆண்டு மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் நீட் தேர்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார். அதன்படி, செப்டம்பா் 12-ஆம் தேதி நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், முன்கூட்டியே வினாத்தாள் வெளியானது போன்ற முறைகேடுகள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வை நடத்தக்கோரி தேர்வு எழுதிய மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். 

மாணவர்கள் சார்பில் வழக்குரைஞர் மம்தா ஷர்மா மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:  

செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்துமுடிந்த நீட் தேர்வில் ஆள்மாறட்டம், வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களிலேயே விடை குறியீடுகள் கசிவானது போன்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

பயிற்சி மையங்களில் முன்கூட்டியே நீட் தேர்வு வினாத்தாளை வழங்கி முறைகேடு நடந்துள்ளது. ராஜஸ்தானில் தேர்ந்த ஆசிரியர்கள் மூலம் விடை குறியீடுகளை தேர்வு மையத்திலேயே விநியோகித்து முறைகேடு செய்தது, தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது போன்ற முறைகேடுகளும் நடந்துள்ளதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

நீட் தேர்வில் முறைகேடு நடந்தது தொடர்பாக சிபிஐ  4 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது, ராஜஸ்தான், உத்தரப்பிரரேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநில காவல் நிலையங்களில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் விரைவில் வர இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com