இளைஞரை பயங்கரவாதியாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்பிய பாகிஸ்தான்: விடியோ வெளியிட்டது ராணுவம்

ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் உயிருடன் பிடிபட்ட பதின்ம வயது பயங்கரவாதி, தன்னை மீட்டுச் செல்லுமாறு பாகிஸ்தானில் உள்ள ஏஜெண்டுகளை வலியுறுத்தியுள்ளார்.
இளைஞரை பயங்கரவாதியாக மாற்றி இந்தியாவுக்கு அனுப்பிய பாகிஸ்தான்: விடியோ வெளியிட்டது ராணுவம்


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் உயிருடன் பிடிபட்ட பதின்ம வயது பயங்கரவாதி, தன்னை மீட்டுச் செல்லுமாறு பாகிஸ்தானில் உள்ள ஏஜெண்டுகளை வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகளைப் பிடிக்கும் முயற்சியை இந்திய ராணுவம் கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. உரி பகுதியில் கடந்த 26-ஆம் தேதி ஏற்பட்ட மோதலின்போது அலி பாபர் பாத்ரா என்ற பதின்ம வயது பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டார். மற்றொரு பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், அலி பாபர் பாத்ரா பேசியுள்ள விடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த விடியோவில் அவர் கூறியிருப்பது:

என்னை இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததுபோல தற்போது என்னை மீட்டு எனது தாயாரிடம் அழைத்துச் செல்லுமாறு லஷ்கர்-ஏ-தொய்பாவின் பகுதி கமாண்டர், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, பாகிஸ்தான் ராணுவம் ஆகியவற்றைக் கேட்டுக் கொள்கிறேன்.

காஷ்மீரில் உள்ள நிலைமை குறித்து பாகிஸ்தான் ராணுவம், ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, லஷ்கர் பயங்கரவாத அமைப்பு ஆகியவை பொய்களைப் பரப்பி வருகின்றன. இந்திய ராணுவம் ரத்தக்களரியில் ஈடுபட்டு வருவதாக எங்களிடம் சொல்லப்பட்டது. ஆனால் இங்கு அமைதி நிலவுகிறது. என்னை இந்திய ராணுவம் நன்றாக கவனித்துக்கொள்கிறது என்பதை எனது தாயாருக்குக் கூற விரும்புகிறேன். நான் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு வரும் உள்ளூர்வாசிகளிடம் இந்திய ராணுவ அதிகாரிகளும் படைவீரர்களும் அன்புடன் நடந்து கொள்கின்றனர். இங்கு தினசரி ஐந்து முறை தொழுகைக்கு வருமாறு ஒலிபெருக்கிகள் மூலம் அழைப்பு விடுக்கப்படுவதை நான் கேட்கிறேன்.

பாகிஸ்தான் ராணுவத்தின் அணுகுமுறைக்கு நேர் எதிராக இந்திய ராணுவத்தின் அணுகுமுறை உள்ளது. இதன்மூலம் காஷ்மீரில் அமைதி நிலவுவதை என்னால் உணர முடிகிறது.

இதற்கு மாறாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எங்களது மோசமான நிலைமையை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் எங்களை திசைதிருப்பி இங்கு அனுப்பி வைக்கின்றனர். நான் எனது தந்தையை ஏழு ஆண்டுகளுக்கு முன் இழந்தேன். நிதிப் பிரச்னை காரணமாக நான் பள்ளிக்கூடத்தை விட்டு நிற்க வேண்டியதாகி விட்டது.

சியால்கோட்டில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் நான் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு லஷ்கர் அமைப்புக்கு ஆள் எடுக்கும் ஏஜெண்டுகளைச் சந்தித்தேன். எனது குடும்பச் சூழல் காரணமாக நான் ஒரு ஏஜெண்டுடன் சென்றேன். அவர் எனக்கு ரூ. 20,000 கொடுத்தார். மேலும் ரூ. 30,000 தருவதாக அவர் வாக்குறுதி அளித்தார். கைபர் தெலிஹாபிபுல்லா பகுதியில் எனக்கு பல்வேறு ஆயுதங்களை இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது என்று விடியோவில் அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com