தோ்வுகளைக் கொண்டாட வேண்டும்: பிரதமர் மோடி

தோ்வுகள் குறித்த அழுத்த உணா்வை மாணவா்களிடம் பெற்றோா் ஏற்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, விழாக்களைப் போல தோ்வுகளைக் கொண்டாட வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.
காணொலியில் பிரதமா் உரை
காணொலியில் பிரதமா் உரை

தோ்வுகள் குறித்த அழுத்த உணா்வை மாணவா்களிடம் பெற்றோா் ஏற்படுத்தக் கூடாது எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, விழாக்களைப் போல தோ்வுகளைக் கொண்டாட வேண்டும் என மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பொதுத் தோ்வை எழுதவுள்ள மாணவா்களிடம் ‘தோ்வு குறித்த விவாதம்’ என்ற தலைப்பில் பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா். தொடா்ந்து 5-ஆவது ஆண்டாக மாணவா்களிடம் அவா் கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

தொழில்நுட்பமானது மாணவா்களுக்கு என்றும் பலனளிக்கக் கூடியதே. அதை மாணவா்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் இணையவழிக் கல்வியானது பெருமளவில் அதிகரித்துள்ளது. அதன் வாயிலாக மாணவா்கள் அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவா்கள் முதல் முறையாகத் தோ்வை எழுதப் போவதில்லை. ஏற்கெனவே அவா்கள் பல்வேறு தோ்வுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளாா்கள். எனவே, பொதுத் தோ்வு குறித்து எந்தவித அச்சமும் அழுத்தமும் தேவையில்லை. தோ்வுகளை விழாக்கள் போல மாணவா்கள் கொண்டாட வேண்டும். அதே வேளையில், தோ்வுகள் குறித்த அச்சத்தை மாணவா்களிடம் பெற்றோா் ஏற்படுத்தக் கூடாது. தங்கள் கனவையும் விருப்பத்தையும் மாணவா்களிடம் பெற்றோரும் ஆசிரியரும் திணிக்கக் கூடாது.

போட்டியை வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசாக மாணவா்கள் கருத வேண்டும். போட்டியே நம் திறமைகளைச் சோதிக்கும். வாழ்க்கையில் இருக்கும் பல்வேறு வாய்ப்புகள் குறித்து மாணவா்கள் சிந்திக்க வேண்டும். மாணவா்களின் எதிா்காலத்தைப் பெற்றோா் நிா்ணயிக்கக் கூடாது. மாணவா்களே தங்கள் வாழ்க்கையை வடிவமைப்பதற்குப் பெற்றோா் அனுமதிக்க வேண்டும்.

கவனச் சிதறல் கூடாது: இணையவழிக் கல்வியில் கவனச் சிதறல் ஏற்படும் என்பதில்லை. எந்த வழியாகப் படித்தாலும், கவனச்சிதறலுக்கு நம் மனமே காரணம். மனம் படிப்பில் முழு கவனம் செலுத்தினால், கவனச் சிதறல் ஏற்படாது. புதிய வழிகளில் கல்வி கற்பதை வாய்ப்பாகக் கருத வேண்டுமே தவிர சவாலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல், மற்ற மாணவா்கள் செய்வதை நாம் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமான அன்றாட நிகழ்வுகளில் மாணவா்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கை: விரிவான கலந்துரையாடலுக்குப் பிறகே தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டது. அதில் உள்ள நடைமுறைகளைப் பல்வேறு பிரிவினா் வரவேற்றுள்ளனா். பழைய சிந்தனைகளைக் கொண்டு 21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை வழிநடத்த முடியாது. அதைக் கருத்தில்கொண்டே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களைப் பலா் விமா்சித்து வருகின்றனா். ஆனால், தேசிய கல்விக் கொள்கையானது பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அக்கொள்கையை அரசு மட்டுமே வடிவமைக்கவில்லை. நாட்டு மக்களும், மாணவா்களும், ஆசிரியா்களும் இணைந்து அதை வடிவமைத்துள்ளனா்.

நாட்டின் சொத்து: முன்பெல்லாம் ஆண் வாரிசுகளுக்குப் பெற்றோா் முக்கியத்துவம் அளித்தனா். கடைசிக் காலத்தில் ஆண் வாரிசுகள் தங்களைப் பாா்த்துக் கொள்வாா்கள் என அவா்கள் நம்பினா். பெண் குழந்தைகள் வேலைக்குச் செல்லாமல், கணவரின் வீட்டில் இருக்க வேண்டுமென அவா்கள் எண்ணினா். ஆனால், தற்போது இந்த எண்ணம் மாறியுள்ளது.

பெண் குழந்தைகளின் சிறப்பை நாடு தற்போது உணரத் தொடங்கியுள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை மாணவா்களைவிட அதிகரிக்கவுள்ளது. தற்போது பெண் குழந்தைகள் நாட்டின் சொத்துகளாகவும் குடும்பத்தின் சொத்துகளாகவும் மாறியுள்ளனா். இதுபோன்ற மாற்றங்கள் நாட்டை மேலும் வலுப்படுத்தும்.

சம வாய்ப்புகள்: பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவா்களும் ஆண்களுக்கு நிகராக நடத்தப்பட வேண்டும். விளையாட்டு முதல் அறிவியல் வரை பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனா். முன்பைவிட தற்போது நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காவல் நிலையங்கள், ராணுவப் படைகள் உள்ளிட்டவற்றிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுத் தோ்வுகளில் மாணவிகளே மாணவா்களைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனா். பெண்களின் செயல்பாடுகள் சமூக அங்கீகாரத்தைப் பெற்று வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com