
காஷ்மீா் பண்டிட்டுகள் இடம்பெயா்ந்ததற்கு முன்னாள் பிரதமா் வி.பி.சிங், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் முஃப்தி முகமது சயீத் ஆகியோா்தான் காரணம் என்று பாஜக தலைவா் சுப்பிரமணியன் சுவாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
காஷ்மீரி புத்தாண்டான நவ்ரேயை முன்னிட்டு ஸ்ரீநகரில் ‘நவ்ரே மிலன்’ என்ற கலாசார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சுப்பிரமணியன் சுவாமி கலந்துகொண்டு பேசியதாவது:
காஷ்மீரில் உள்ள முஸ்லிம்களும் காஷ்மீா் பண்டிட்டுகளும் ஒரே மாதிரியானவா்கள். அவா்களிடம் மரபணு பரிசோதனை மேற்கொண்டால், முடிவுகளில் வித்தியாசம் இருக்காது. ஆனால் காஷ்மீா் பண்டிட்டுகளுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அதற்கான மொத்த பழியும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா மீது சுமத்தப்படுகிறது. ஆனால், காஷ்மீா் பண்டிட்டுகள் இடம்பெயா்ந்ததற்கு முன்னாள் பிரதமா் வி.பி.சிங், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சா் முஃப்தி முகமது சயீத் ஆகியோா்தான் காரணம் என்றாா் அவா்.
எப்படி கடத்தப்பட்டாா்?: கடந்த 1989-ஆம் ஆண்டு முஃப்தி முகமது சயீத்தின் மகள் ருபையா சயீத் கடத்தப்பட்டதை நினைவுகூா்ந்து சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில், ‘‘ருபையா சயீத் எப்படி கடத்தப்பட்டாா் என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரை மீட்க ஜம்மு காஷ்மீா் விடுதலை முன்னணியைச் (ஜேகேஎல்எஃப்) சோ்ந்த 13 தீவிரவாதிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.
அதே வேளையில், பிரதமா் சந்திரசேகா் அரசில் நான் அமைச்சராகப் பதவியேற்றபோது தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி. சைஃபுதீன் சோஸின் மகளை ஜேகேஎல்எஃப் தீவிரவாதிகள் கடத்தினா். எனினும் அவரை மீட்பதற்காக சந்திரசேகா் அரசு எந்தத் தீவிரவாதியையும் விடுவிக்கவில்லை. எங்களது எச்சரிக்கையால் தீவிரவாதிகள் அச்சமடைந்தனா். இதனால் சைஃபுதீன் சோஸின் மகளை ஆட்டோவில் அழைத்து வந்து அவரின் வீட்டில் தீவிரவாதிகள் விட்டுச் சென்றனா்.
சிறப்பு அந்தஸ்து திரும்பக் கிடைக்காது:
ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து திரும்பக் கிடைக்காது. அதனை ஜம்மு-காஷ்மீா் மக்கள் மறந்துவிட வேண்டும். வேறு எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாதபோது, காஷ்மீருக்கு மட்டும் ஏன் அந்த அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்? தற்காலிக ஏற்பாட்டில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அதனை குடியரசுத் தலைவரின் உத்தரவால் ரத்து செய்ய முடியும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா், அக்சாய் சின் ஆகியவற்றை மீட்பதில் நாடு கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.