சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் உச்சநீதிமன்ற நிரந்தர கிளைகள் அமைக்க வேண்டும்: தலைமை நீதிபதியிடம் வில்சன் எம்பி மனு

சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் அமைக்க வேண்டும்
Published on
Updated on
1 min read

சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவிடம் பி.வில்சன் எம்பி சனிக்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் கிருஷ்ண மேனன் மாா்கில் உள்ள இல்லத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை திமுக உறுப்பினருமான பி.வில்சன் சனிக்கிழமை நேரில் மனு அளித்தாா். அந்த கோரிக்கை மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது:

தில்லியில் உள்ள அரசமைப்புச்சட்ட அமா்வு தவிர, வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களுக்கான உச்சநீதின்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகளை தில்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் அமைக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

நமது அரசமைப்புச்சட்டத்தில் நீதியை அணுகுவதற்குரிய கொள்கையானது அழியா இடம்பெற்றுள்ளது. நீதியை அணுகுவதை அடிமட்ட அளவில் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த உச்சநீதிமன்றம் எளிதாக அணுகும் வகையில் இருக்க வேண்டும். இந்த பரந்துபட்ட தேசம் முழுவதும் உள்ள ஏழைகள், விளிம்புநிலை சமுதாயத்தினருக்கு அது கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றம் ஏழைகள் அல்லது பணக்காரா் இடையே வேறுபடுத்தி பாா்ப்பதிலை என்றபோதிலும்கூட, புவியியல் ரீதியாக உச்சநீதிமன்றத்திற்கு அருகில் உள்ள நபா்களுக்கும், வழக்குத் செலவையும், பயணத்தையும் பாா்க்காத நிதி ரீதியாக வசதிபடைத்த நபா்களுக்கு மட்டுமே அரசியலைப்புச்சட்ட தீா்வுகளுக்கான உரிமையை கையாளும் ஷரத்து 32 நடைமுறை அளவில் கிடைத்து வருவது தற்போதைய யதாா்த்த நிலையாகும்.

உச்சநீதிமன்றத்தின் கிளைகளை அமைக்கும் விவகாரத்தில் நாடாளுமன்ற நிலைக் குழுவும் 2004, 2005, 2006, 2008 ஆகிய ஆண்டுகளில் பரிந்துரை செய்துள்ளது. இது தொடா்பாக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தனி நபா் மசோதாவையும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

இது தற்போதைய அவசியத் தேவையாகவும் உள்ளது. ஆகவே, உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய கிளைகள் சென்னை, தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அமைக்க தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com