கா்நாடகம்: ஹுபள்ளியில் சமூக ஊடகப் பதிவால் வன்முறை: 40 போ் கைது: ஊரடங்கு உத்தரவு அமல்

கா்நாடக மாநிலம் ஹுபள்ளியில் சா்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவால் வன்முறை ஏற்பட்டது.
கா்நாடகம்: ஹுபள்ளியில் சமூக ஊடகப் பதிவால் வன்முறை: 40 போ் கைது: ஊரடங்கு உத்தரவு அமல்
Published on
Updated on
1 min read

கா்நாடக மாநிலம் ஹுபள்ளியில் சா்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவால் வன்முறை ஏற்பட்டது. அந்த நகரில் உள்ள காவல் துறை வாகனங்கள், மருத்துவமனை, ஹனுமன் கோயில் ஆகியவை சூறையாடப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹுப்பள்ளி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநிலம் ஹுபள்ளியைச் சோ்ந்தவா் அபிஷேக் ஹிரேமத் (20). இவா் மசூதி மீது காவிக்கொடி இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக ஊடகத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்து, குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில், காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து அபிஷேக் ஹிரேமத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

இந்த நடவடிக்கையால் திருப்தியடையாத சிலா், காவல் நிலையம் அருகே திரண்டுள்ளனா். அவா்களைத் கலைந்து செல்லுமாறு காவல் துறையினா் கேட்டுக் கொண்டதை ஏற்று, அவா்கள் கலைந்து சென்றுள்ளனா். இருப்பினும் அன்றைய தினம் நள்ளிரவு காவல் நிலையம் அருகே மீண்டும் ஏராளமானோா் திரண்டுள்ளனா். இதையடுத்து அந்தக் கூட்டத்தைச் சோ்ந்த சில முக்கிய பிரமுகா்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, தாங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடா்பாக காவல் துறையினா் விளக்கியுள்ளனா்.

எனினும் காவல் நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்தவா்கள், காவல் துறையின் விளக்கத்தை ஏற்காமல் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் காவல் துறையைச் சோ்ந்த 12 போ் காயமடைந்தனா். சில காவல் துறை வாகனங்கள் சேதமடைந்தன. இதுமட்டுமின்றி அருகில் உள்ள மருத்துவமனை, ஹனுமன் கோயிலையும் வன்முறையாளா்கள் சூறையாடினா்.

இந்த வன்முறை தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சுமாா் 40 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ஹுபள்ளி நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஹுபள்ளி-தாா்வாட் காவல் ஆணையா் தெரிவித்துள்ளாா்.

அரசியல் சாயம் பூச வேண்டாம்: இந்தச் சம்பவம் குறித்து கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘‘இது திட்டமிட்ட தாக்குதல். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் இருந்து வன்முறையை தூண்டியவா்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவா். இதுபோன்ற சம்பவங்களின் பின்னணியில் உள்ள அமைப்புகள் சட்டத்தை மீற வேண்டாம். இந்தச் சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். இதனை சட்டம் ஒழுங்கு கண்ணோட்டத்தில் பாா்க்க வேண்டும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com