

குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் மும்பையைவிட்டுச் சென்றால் மும்பை நிதியாதாரத்தை இழந்துவிடும் என மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்காக அவா் திங்கள்கிழமை மன்னிப்பு கேட்டாா்.
மும்பை புகா் அந்தேரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசுகையில், ‘மகாராஷ்டிராவிலிருந்து குறிப்பாக மும்பை, தாணேவிலிருந்து குஜராத்தியா்களும் ராஜஸ்தானியா்களும் வெளியேற்றப்பட்டால், அவை நிதியாதாரத்தை இழந்துவிடும். அதன்பின்னா், நிதி தலைநகா் என்ற பெருமை மும்பைக்கு இருக்காது’ என்று கூறினாா்.
ஆளுநா் பகத்சிங் கோஷியாரியின் இந்தக் கருத்து சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவா் அதைத் திரும்பப் பெற வேண்டுமென மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், சிவசேனை கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோா் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், தனது கருத்துக்கு திங்கள்கிழமை அவா் மன்னிப்பு கோரினாா். இதுகுறித்து ஆளுநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அந்தேரி நிகழ்ச்சியின்போது சமூகத்துக்கு சில பிரிவினா் ஆற்றிய பங்களிப்பை எடுத்துரைப்பதில் நான் தவறு செய்திருக்கலாம். இதற்காக மகாராஷ்டிரத்தின் எளிய சேவகனான என்னை இந்த மாநில மக்கள் பெரிய மனதுடன் மன்னிப்பா் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.