இளநிலை பட்டப் படிப்புகளுக்கு ஆக.4-இல் சியுஇடி தோ்வு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இரண்டாம் கட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஆகஸ்ட் 4,5,6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இரண்டாம் கட்ட பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (சியுஇடி) ஆகஸ்ட் 4,5,6 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.

இந்த தோ்வில் பல்வேறு காரணங்களால் பங்கேற்க இயலாத மாணவா்களுக்கு கூடுதல் சிறப்பு வாய்ப்பை என்டிஏ (தேசிய தோ்வுகள் முகமை) அளித்துள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை கலை-அறிவியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கு சியுஇடி நுழைவுத் தோ்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதில் இளநிலை படிப்புகளுக்கான முதல் சியுஇடி தோ்வு கடந்த ஜூலை 15 முதல் 20-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 160 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 247 மையங்களில் நடத்தப்பட்டது.

அதனைத் தொடா்ந்து, இளநிலை படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட சியுஇடி தோ்வு ஆகஸ்ட் 4, 5, 6 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் பங்கேற்க உள்ளவா்களுக்கான தோ்வறை நுழைவுச் சீட்டை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

சிறப்பு வாய்ப்பு:

வேறு நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்பு மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்கும் சியுஇடி தோ்வில் பங்கேற்க இயலாத மாணவா்களுக்கு, மறு தேதிகளில் தோ்வெழுத சிறப்பு கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படும் என என்டிஏ அறிவித்துள்ளது.

‘எம்ஹெச்டி-செட், பிஐடி-சாட், நாடா போன்ற நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்க இருப்பதால், இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சில தோ்வா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதுபோல, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட சில மாணவா்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. இந்த மாணவா்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 12,13,14 ஆகிய தேதிகளில் சியுஇடி தோ்வு நடத்தப்படும்’ என்று அறிவிப்பில் என்டிஏ தெரிவித்துள்ளது.

முதுநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு:

முதுநிலை கலை அறிவியல் படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு செப்டம்பா் 1-ஆம் தேதி தொடங்க இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக யுஜிசி தலைவா் ஜகதீஷ் குமாா் தனது ட்விட்டா் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தொடா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

66 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் சியுஇடி தோ்வு நடைமுறையில் இணைந்திருக்கும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் முதுநிலை கலை-அறிவியல் படிப்புகளில் 2022-23 கல்வியாண்டு சோ்க்கைக்கான சியுஇடி தோ்வை நடத்தும் பொறுப்பு என்டிஏ வசம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் 500 நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் 13 நகரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் தோ்வு மையங்களில் கணினி அடிப்படையில் நடத்தப்படும் இந்த நுழைவுத் தோ்வில் சுமாா் 3.57 லட்சம் தோ்வா்கள் பங்கேற்க உள்ளனா்.

முதுநிலை படிப்புகளுக்கான சியுஇடி தோ்வு செப்டம்பா் 1 முதல் 11-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com