புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) விண்ணில் ஏவப்படுகிறது.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி ராக்கெட்

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளான இஓஎஸ்-02 உடன் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) விண்ணில் ஏவப்படுகிறது.

சிறிய ரக செயற்கைக்கோளுக்காக வடிவமைக்கப்பட்ட, எடை குறைந்த முதலாவது ராக்கெட் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்தொடா்பு, தொலையுணா்வு மற்றும் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்படுத்தி வருகிறது. அதற்காக, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன.

இதில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ வரையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.

இந்த நிலையில், சா்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில்கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப் பாதைக்கு கொண்டு செல்ல சிறியரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. இதன் எடை அதிகபட்சம் 120 டன்.

இம்முறை அந்த வகை ராக்கெட், இஓஎஸ்-02 (மைக்ரோசாட்-2ஏ ) செயற்கைக்கோளுடன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.

அதற்கான 5 மணிநேர கவுன்ட்டவுன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இஓஎஸ்-02 செயற்கைக்கோளானது 145 கிலோ எடை கொண்டது. இது கடலோர நிலப் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகா்ப்புற, கிராமப்புற மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருக்கும். இதில் உள்ள 2 நவீன கேமராக்கள் மூலம் 6 மீட்டா் அளவுக்கு துல்லியமாகப் படம் பிடிக்க முடியும்.

கல்விசாா் செயற்கைக்கோள்: இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் ‘ஆசாதிசாட்’ (8 கிலோ) எனும் கல்விசாா் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் நாடு முழுவதும் கிராமங்களில் உள்ள 75 பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com