பிகார் மாநிலத்தில் மீண்டும் முதல்வராக ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பகு சௌஹானை நிதீஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் கூட்டாக சென்று உரிமை கோரினர்.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் இருவரும் ஆளுநரை சந்தித்தனர். கூட்டணி அமைத்ததன் மூலம் 160 எம்.எல்.ஏ.க்கள் நிதீஷ் குமார் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜிநாமா!
ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தொடர்ந்து, பிகார் மாநிலத்தின் முதல்வராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அவ்வாறு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தால், மாநில முதல்வராக நிதீஷ் குமார் நாளை பதவியேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகார் மாநிலத்தில் கடந்த சில நாள்களாகவே அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், கருத்து மோதல் காரணமாக பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பாஜக கூட்டணியில் இருந்து விலக முடிவெடுத்தார்.
கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக்குப் பிறகு, பிகார் ஆளுநர் பகு சௌஹானை இன்று மாலை ராஜ் பவனில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மாநிலத்தின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவை அவரது இல்லத்தில் சென்று நிதீஷ் குமார் சந்தித்தார்.
இருவரும் பிகாரில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் முடிவில் கூட்டணி கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
நிதீஷ் குமாருக்கு பெருகும் ஆதரவு
2015ஆம் ஆண்டு மெகா கூட்டணி சார்பில் முதல்வரான நிதீஷ் குமார், 2017ஆம் ஆண்டு பாஜக கூட்டணிக்கு மாறினார். தற்போது கருத்து மோதல் காரணமாக கூட்டணியிலிருந்து விலகியுள்ளார்.
243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், 79 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு 45, காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாலும், இடதுசாரியும் ஆதரவு தெரிவித்துள்ளதாலும், 160 உறுப்பினர்களுடன் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.