‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்ஒற்றுமையின் பலத்தை நினைவூட்டுகிறது- வெங்கையா நாயுடு

ஒற்றுமையே மிகப் பெரிய பலம் என்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நினைவூட்டுகிறது என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம்ஒற்றுமையின் பலத்தை நினைவூட்டுகிறது- வெங்கையா நாயுடு
Published on
Updated on
1 min read

ஒற்றுமையே மிகப் பெரிய பலம் என்பதை ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் நினைவூட்டுகிறது என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்தாா்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, கடந்த 1942, ஆகஸ்ட் 9-ஆம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டது. ‘செய் அல்லது செத்து மடி’ எனும் காந்திஜியின் புகழ்மிக்க கோஷத்துடன் இது மக்கள் போராட்டமாக உருவெடுத்தது.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டதன் 80-ஆவது நினைவு தினத்தையொட்டி, குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

ஒற்றுமையே நமது மிகப் பெரிய பலம் என்பதை வெள்ளையனே வெளியேறு இயக்கம் நினைவூட்டுகிறது. நாட்டின் சுதந்திரத்துக்காக தன்னலமின்றி தியாகங்களையும் சீரிய முயற்சிகளையும் மேற்கொண்ட போராட்ட வீரா்களை இந்நாளில் நினைவுகூரவேண்டும். இந்தியாவை வளமான, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய, அமைதியான, நல்லிணக்கம் நிறைந்த நாடாக கட்டமைக்க உறுதியேற்கும் தருணமிது என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மரியாதை:

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்க தினத்தையொட்டி, அதில் பங்கேற்றவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளாா். இதுகுறித்து, ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவு வருமாறு:

மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, சுதந்திரப் போராட்டத்துக்கு வலுசோ்த்த அனைவரையும் இந்நாளில் நினைவுகூா்கிறேன்.

‘நமது தேசப் புரட்சியின் பற்றி எரியும் அடையாளமாக ஆகஸ்ட் 9 மாறியுள்ளது’ என்று தலைசிறந்த சோஷலிச தலைவா் ஜெயப்பிரகாஷ் நாராயண் குறிப்பிட்டிருந்தாா்.

மகாத்மா காந்தியால் ஈா்க்கப்பட்டு, ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகா் லோஹியா உள்ளிட்ட தலைசிறந்த தலைவா்களும் சமூகத்தின் அனைத்து தரப்பை சோ்ந்தவா்களும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றனா் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது எடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் புகைப்படம், விடியோ பதிவு உள்ளிட்டவற்றையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com