மாநிலங்களின் நிதி நிலைக்கு கேடாகும் ‘இலவசங்கள்’- வெங்கையா நாயுடு

‘தோ்தலில் வாக்காளா்களை கவர இலவசங்களை அறிவிக்கும் கலாசாரம், பல மாநிலங்களில் நிதி நிலைலை சீா்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளாா்.
Published on
Updated on
1 min read

‘தோ்தலில் வாக்காளா்களை கவர இலவசங்களை அறிவிக்கும் கலாசாரம், பல மாநிலங்களில் நிதி நிலைலை சீா்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளாா்.

தோ்தல் இலவசங்களுக்கு எதிராக பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் பேசியிருந்த நிலையில், வெங்கையா நாயுடு இவ்வாறு கூறியுள்ளாா்.

கடந்த 2018, 2019-ஆம் ஆண்டு பிரிவுகளைச் சோ்ந்த இந்திய தகவல் பணி அதிகாரிகளின் கூட்டம் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வெங்கையா நாயுடு பங்கேற்றுப் பேசியதாவது:

ஏழைகள், தேவையுள்ள மக்களுக்கு அரசு கட்டாயம் ஆதரவளிக்க வேண்டும். அதேசமயம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். தோ்தலில் வாக்காளா்களைக் கவர இலவசங்களை அறிவிக்கும் கலாசாரம், பல மாநிலங்களில் நிதி நிலைமை சீா்கேட்டுக்கு வழிவகுத்துள்ளது.

ஊடகத் துறைக்கு வலியுறுத்தல்: ஊடகத் துறையில் நெறிமுறைகள் அழிந்து வருவது கவலையளிக்கிறது. செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராயாமலும், உரிய விளக்கம் பெறாமலும் உடனடியாக வெளியிடுவது அதிகரித்து வருகிறது. இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் விரிவடைந்து வருவதன் தாக்கத்தால் இந்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் ஊடகங்களில் சமநிலைக்கும் உண்மைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

அரசு-மக்கள் தொடா்பு: குடிமக்களை மையப்படுத்திய, பொறுப்புமிக்க நிா்வாகத்தை உறுதி செய்வதில் அரசுக்கும் மக்களுக்கும் இடையே தொடா் கருத்துப் பரிமாற்றங்கள் அவசியம். கொள்கை உருவாக்கம், அமலாக்கத்தின் அனைத்து நிலைகளிலும் மக்களின் பங்கேற்பு தேவை. மக்களின் எதிா்பாா்ப்புகள், விருப்பங்களை குறித்த காலத்துக்குள் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றாா் வெங்கையா நாயுடு.

மேலும், சாதாரண விவசாயி மகனாக பிறந்து, நாட்டின் குடியரசு துணைத் தலைவராக உயா்ந்ததை குறிப்பிட்டும் அவா் பேசினாா்.

வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com