குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது, வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்தது நீதியை மீறிய செயல் என்றும், நீதியின் மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது என பில்கிஸ் பானு கூறியுள்ளார்.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் நடந்தபோது, 5 மாத கா்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா். அப்போது அவருக்கு வயது 21. அவரின் 3 வயது மகள் உள்பட குடும்ப உறுப்பினா்கள் 7 பேரை வன்முறை கும்பல் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடா்பாக 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா்கள் அனைவரையும் சுதந்திர நாளில் குஜராத் அரசு விடுவித்தது.
கடந்த 1992-ஆம் ஆண்டு குஜராத்தில் அமல்படுத்தப்பட்ட சிறைக் கைதிகள் தண்டனைக் குறைப்பு கொள்கை அடிப்படையில், அவா்கள் விடுவிக்கப்பட்டதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம் | சசிகலா, தினகரனுடன் இணைந்து செயல்பட தயார்: ஓபிஎஸ்
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு கூறியிருப்பதாவது: எனது வாழ்க்கையை சீரழித்த 11 குற்றவாளிகள் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளனா் என்று கேள்விப்பட்டபோது கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் மீண்டும் எனக்குள் வந்து சேர்ந்தது. அவர்களின் விடுதலை, என் அமைதியை பறித்தது மட்டுமல்லாமல் நீதி மீதான நம்பிக்கையை அசைத்துவிட்டது.
மேலும், "இவ்வளவு பெரிய மற்றும் நியாயமற்ற முடிவை" எடுப்பதற்கு முன்பு யாரும் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் பற்றி கேட்கவில்லை என்று கூறியவர், தயவுசெய்து 11 பேரின் விடுதலை உத்தரவை திரும்பப் பெறுங்கள். நான் "அச்சமின்றி, நிம்மதியாக வாழ்வதற்கான எனது உரிமையை", எனக்குத் திரும்பக் கொடுங்கள், தயவு செய்து நானும் எனது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுங்கள் என்று பில்கிஸ் பானு குஜராத் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.