
பாஜக தலைமையிலான மத்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி கேரளத்தை அழிக்க நினைக்கிறது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
மாநிலத்தின் முன்னேற்றப் பாதையில் பாஜக தலைமையிலான மத்திய அரசு பல தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பிஎஸ்சி தொழிலாளர்களுக்கான மாநில மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: “ மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச உரிமைகளையும் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகிறது. கேரளத்தை அழிக்கும் நோக்கில் நிதி அடிப்படையிலான நெருக்கடியை மத்திய அரசு கொடுத்து வருகிறது. நாட்டில் உள்ள கூட்டாட்சி தத்துவத்தை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது.
இதையும் படிக்க: புதிய விமான நிலையம் இன்றியமையாதது: தங்கம் தென்னரசு
எங்களுக்கு கிடைக்க வேண்டிய நிதிப் பங்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாநிலத்தின் கடன் வாங்கும் அதிகாரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது கேரளத்தை நிதி நெருக்கடியில் சிக்க வைப்பதற்கான முயற்சி. மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரங்களை எடுத்துக் கொள்ள நினைக்கிறது. இது நாட்டிற்கான ஒரு வித சாபம். நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் ஆனால் உங்களால் முடியாது என்பதே மத்திய அரசின் மனநிலையாக உள்ளது. மத்திய அரசு கூட்டுறவுத் துறையையும் எடுத்துக் கொள்ள நினைக்கிறது. 10 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டு மத்திய அரசு வேலைவாய்ப்பினை அழிக்க நினைக்கிறது. அரசியலமைப்பினால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களை தங்களது சுய நலத்திற்காக மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.