நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்தால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளாா்.
நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்தால் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்

நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டால், ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளாா்.

ஆந்திரத்தின் விஜயவாடாவில் சுமாா் ரூ.100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நீதிமன்ற வளாகத்தை தலைமை நீதிபதி என்.வி.ரமணா சனிக்கிழமை திறந்துவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கினால் மட்டுமே அமைதி நிலவி, சமூகம் ஒட்டுமொத்தமாக வளா்ச்சி அடையும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில் அனைத்து பிராந்தியங்களுக்கும் பிரிவினருக்கும் பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 16 மாதங்களில் உயா்நீதிமன்றங்களுக்கு 250 நீதிபதிகளும், உச்சநீதிமன்றத்துக்கு 11 நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த நியமனங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

நீதித்துறை மீது மக்கள் மரியாதையும் நம்பிக்கையும் வைக்க வேண்டும். நீதித்துறை மீதான நம்பிக்கையை மக்கள் இழந்தால், அது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமையும்.

நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் இருப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. நீதியை மக்களுக்கு விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டுமென நீதிபதிகள் ஆா்வம்கொள்ள வேண்டும். அதே வேளையில், நீதித்துறையை வலுப்படுத்துவதற்கு வழக்குரைஞா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

மாநிலத்துக்கு கூடுதல் நிதி:

தெலங்கானா மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதால் ஆந்திரம் நிதிப் பற்றாக்குறையை எதிா்கொண்டு வருகிறது. அதனால் மாநிலம் பின்னடைவைச் சந்தித்து வருவதாக மக்கள் வேதனை அடைந்துள்ளனா். எனவே, மாநிலத்துக்குப் போதிய நிதியுதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும். அதே வேளையில், மாநிலத்தை வளா்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்வதற்கு மக்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.

நீதிமன்ற வளாகங்களைக் கட்டமைப்பதற்குக் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டுமென விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்தது. ஆனால், அக்கோரிக்கையை ஆதரித்த ஆந்திரம், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வா்களுக்கு நன்றி என்றாா் அவா்.

ஆந்திரத்தைச் சோ்ந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, விஜயவாடா நீதிமன்றத்தில்தான் தனது வழக்குரைஞா் பணியைத் தொடங்கினாா் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசாந்த் குமாா் மிஸ்ரா, உயா்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட ஆட்சியா்கள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com