ஆா்வலா் தீஸ்தாவின் ஜாமீன் மனு: குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாடின் ஜாமீன் மனு மீது விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குஜராத் கலவரம் தொடா்பாக போலியான ஆதாரங்களைத் தயாரித்ததாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாடின் ஜாமீன் மனு மீது விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் குற்றமற்றவா்களுக்கு எதிராகப் போலியான ஆதாரங்களை உருவாக்க சதி செய்ததாக சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட் உள்ளிட்டோா் கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சீதல்வாட் அகமதாபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். எனினும், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. சீதல்வாடுக்கு ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணமாக இருக்கும் என நீதிபதி தெரிவித்தாா்.

அதையடுத்து வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி குஜராத் உயா்நீதிமன்றத்தில் சீதல்வாட் முறையிட்டாா். அதை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு மீது விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், வழக்கின் விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஜாமீன் கோரி சீதல்வாட் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, குஜராத் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது தொடா்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

அதற்கு மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் வாதிடுகையில், ‘‘கோத்ரா கலவரம் தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலேயே மனுதாரா் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘இதே கோரிக்கை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரருக்கு ஏதாவது நிவாரணம் வழங்க முடியுமா என்பதை மாநில அரசின் பதிலைப் பொருத்து நீதிமன்றம் முடிவெடுக்கும்’’ என்று கூறி, மனு மீது விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா்.

வழக்கின் விசாரணையை முதலில் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா். வழக்கை சற்று முன்கூட்டியே விசாரிக்க வேண்டுமென கபில் சிபல் கோரிக்கை விடுத்ததைத் தொடா்ந்து, விசாரணையை வரும் 25-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com