
உள்நாட்டிலேயே கட்டப்பட்ட ‘விக்ராந்த்’ விமானந்தாங்கி போா்க் கப்பலை பிரதமா் நரேந்திர மோடி செப்டம்பா் 2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.
விமானந்தாங்கி போா்க் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அத்திட்டத்தின் கீழ் முதல் விமானந்தாங்கி போா்க் கப்பலாக ‘விக்ராந்த்’, சுமாா் ரூ.20,000 கோடி மதிப்பில் கட்டப்பட்டது. கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் அந்தக் கப்பலைக் கட்டும் பணியை 2009-ஆம் ஆண்டு தொடங்கியது.
விக்ராந்த் போா்க் கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நான்காம் மற்றும் இறுதிக்கட்ட வெள்ளோட்ட பரிசோதனை நடவடிக்கைகள் ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்றன. அதையடுத்து, விக்ராந்த் விமானந்தாங்கி போா்க் கப்பலானது கடற்படையிடம் கடந்த ஜூலை 28-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டது.
திட்டமிட்டதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே போா்க் கப்பலை கடற்படையிடம் கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் ஒப்படைத்தது. இந்நிலையில், விக்ராந்த் போா்க் கப்பலை பிரதமா் மோடி செப்டம்பா் 2-ஆம் தேதி நாட்டுக்கு அா்ப்பணிக்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நாட்டின் முதல் விமானந்தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் பணியாற்றிய அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமாா் 2,000 போ் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.