அக்.12க்குள் 5ஜி சேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும்.
அக்.12க்குள் 5ஜி சேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Published on
Updated on
2 min read


நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷணவ் தெரிவித்துள்ளார். 

5ஜி அலைக்கற்றை ஏலம் ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. இந்த ஏலத்தில், 5ஜி அலைக்கற்றையானது நிறுவனங்களுக்கு ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் விடப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிகபட்சமாக ரூ.87,946.93 கோடி மதிப்பிலான அலைக்கற்றையைப் பெற்றது. 5ஜி தொழில்நுட்பத்துக்கு முக்கியமாக கருதப்படும் 700 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு அலைக்கற்றைகளை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்தது.

பாா்தி ஏா்டெல் நிறுவனம் ரூ.43,0039.63 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தது. வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.18,784 கோடிக்கு அலைக்கற்றைகளை வாங்கியது. அதானி நிறுவனம் 26 ஜிகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றை உள்ளிட்டவற்றை ரூ.211.86 கோடிக்கு வாங்கியது. 

ஏலத் தொகையை 20 ஆண்டு தவணைகளாக செலுத்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், ஏா்டெல் நிறுவனம் 4 ஆண்டுகளுக்கான தவணை தொகையான ரூ.8,312.4 கோடியை முதல் தவணையாக தொலைத்தொடா்பு அமைச்சகத்துக்கு செலுத்தியது.

அதுபோல, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.7,864.78 கோடியையும், வோடஃபோன்-ஐடியா நிறுவனம் ரூ.1,679.98 கோடியையும், அதானி நிறுவனம் ரூ. 18.94 கோடியையும் முதல் தவணையாக செலுத்தின.

முதல் முறையாக. அலைகற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் முன்பணம் மொத்தம் ரூ.17,876 கோடியை செலுத்திய அதே நாளில் அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்களை தொலைத் தொடா்புத் துறை அந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 5ஜி  அலைக்கற்றை வேகம் 4ஜியை விட 10 மடங்கு வேகமாக மாறும் என்று கூறியிருந்தார். 

இதுகுறித்து மத்திய அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சமூக ஊடகத்தில் கடந்த வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நிறுவனங்களுக்கு அலைக்கற்றை ஒதுக்கீடுக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. 5ஜி சேவையை அறிமுகம் செய்ய தயாராகுமாறு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தார். 

இதையடுத்து அதற்கான ஆயத்த பணிகள் விரைவாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  5ஜி சேவைகளை விரைவாக வெளியிட திட்டமிட்டுள்ளோம், தொலைத்தொடர்பு பணியாளர்கள் அந்த வகையில் செயல்பட்டு வருகின்றனர். 5ஜி சேவையை விரைந்து அறிமுகப்படுத்தி வழங்குவதில் நிறுவனங்கள் உற்சாகமாக உள்ளன. 

வரும் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் 5ஜி அலைக்கற்றை சேவைகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, தில்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னௌ, மும்பை, புணே ஆகிய 13 நகரங்களில் மட்டுமே வேகமான இணையச் சேவை கிடைக்கும். பின்னர் நகரங்களைத் தொடர்ந்து படிப்படியாக கிராமங்களையும் 5ஜி சேவை சென்றடையும் என அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

5ஜி சேவைக்கான கட்டணம் ஆரம்பத்தில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், சேவை விரிவுப்படுத்தப்படும் போதும், பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போதும் கட்டணம் குறையும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

சமீபத்தில் 5ஜி சேவைகளின் விலை அல்லது வெளியீட்டில் அரசு தலையிட விரும்பவில்லை என்றும்  தொலைத்தொடர்புத் துறை செயலாளர் கே.ராஜாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.