தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சித்ரா ராமகிருஷ்ணா
சித்ரா ராமகிருஷ்ணா

தேசியப் பங்குச் சந்தையில் பணியாற்றும் அலுவலா்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பங்குச் சந்தையின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஜாமீன் மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேசிய பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் சித்ரா ராமகிருஷணா கைது செய்யப்பட்டார்.

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டேவின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இன்று சித்ரா ராமகிருஷ்ணாவின் மனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, விசாரணையில், இந்த முறைகேடுகளில் சித்ரா ராமகிருஷ்ணா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டிருப்பதும், நன்கு தெரிந்தே முறைகேட்டுக்கு உதவியிருப்பதும், அனைத்து முறைகேடுகளிலும் இவர் உடந்தையாக இருந்ததும் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறியதைத் தொடர்ந்து ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தையின் கணினி சேமிப்பகத்தின் கோ-லொகேஷன் வசதியை பங்குத் தரகு நிறுவனங்களுக்கு அளித்தது தொடா்பான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா, தேசிய பங்குச் சந்தை குழும முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோா் கைது சிபிஐயால் செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே தொடங்கிய ஐ-செக் சா்வீஸ் நிறுவனம், தேசியப் பங்குச் சந்தை அலுவலா்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்கேட்டதாகப் புகாா் எழுந்துள்ளது. சித்ரா ராமகிருஷ்ணா உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மோசடியில் நடந்த நிதி முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து, அவரிடம் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தியது.

இதற்கிடையே தொலைபேசி ஒட்டுக்கேட்பில் நடந்த பணமோசடி தொடா்பாக, மும்பை முன்னாள் காவல் ஆணையா் சஞ்சய் பாண்டே மீது அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com