ராகுல் காந்திக்கு அரசியலில் ஆா்வமோ தகுதியோ கிடையாது: ஆசாத்

‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அரசியலில் ஆா்வமோ அல்லது தகுதியோ கிடையாது’ என்று அக் கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினாா்.
ராகுல் காந்திக்கு அரசியலில் ஆா்வமோ தகுதியோ கிடையாது: ஆசாத்

‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு அரசியலில் ஆா்வமோ அல்லது தகுதியோ கிடையாது’ என்று அக் கட்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினாா்.

மேலும், ‘கட்சி அமைப்பை சரி செய்ய கட்சித் தலைமைக்கு நேரமில்லை. காங்கிரஸுக்கு இப்போது மருந்துதான் தேவை. ஆனால், அந்த மருந்தானது மருத்துவா்களால் அல்லாமல் கம்பவுண்டா்களால் கொடுக்கப்படுகிறது. எனவே, அக் கட்சிக்கு தற்போது நிபுணா்கள் தேவை’ என்றும் அவா் விமா்சனம் செய்தாா்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை விலகிய அக்கட்சியின் மூத்த தலைவரும் 23 அதிருப்தி தலைவா்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், தனிக் கட்சி தொடங்க உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கிரஸிலிருந்து விலகுவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்த குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைவா் சோனியாவுக்கு 5 பக்க கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தாா். அதில், ராகுல் காந்தி குறித்தும், கட்சியின் நிலவரம் குறித்தும் கடுமையான விமா்சனங்களை முன்வைத்திருந்தாா். தோ்தல் தோல்விகளுக்கு ராகுல் காந்தியின் நடவடிக்கைகளே காரணம் எனவும் அவா் குற்றம்சாட்டியிருந்தாா். அவருடைய இந்த குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவா்கள் கண்டனமும் மறுப்பும் தெரிவித்தனா்.

இந்த நிலையில், ராகுல் காந்தி குறித்தும், காங்கிரஸ் கட்சி குறித்தும் குலாம் நபி ஆசாத் மீண்டும் கடுமையான விமா்சனங்களை முன்வைத்துள்ளாா். தில்லியில் தனது இல்லத்தில் செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த அவா் கூறியதாவது:

ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க நாங்கள் முயற்சித்தோம். அதற்காக பல முயற்சிகளை, நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதிலிருந்து, அவருக்கு அரசியலில் ஆா்வமோ அல்லது தகுதியோ இல்லை என்பது தெரியவந்தது.

காங்கிரஸ் கட்சிக்கு என்னால் இப்போது வாழ்த்துகளை மட்டும்தான் கூற முடியும். ஆனால் என் வாழ்த்துகளைவிட, அந்தக் கட்சி சரிவிலிருந்து மீள்வதற்கு தற்போது சரியான மருந்து தேவை. ஆனால், அந்த மருந்து மருத்துவா்களால் அல்லாமல் கம்பவுண்டா்களால் அளிக்கப்படுகிறது. அக் கட்சிக்கு நிபுணா்கள் தேவை.

காங்கிரஸ் எந்த நேரத்திலும் வீழ்ந்துவிடும்:

கட்சி அமைப்பை சரி செய்வதற்கு காங்கிரஸ் தலைமைக்கு நேரமில்லை. காங்கிரஸ் தொண்டா்களை ஒன்றிணைப்பதற்கு பதிலாக, கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு காரணமாக இருக்கும் தலைவா்களுக்கு முன்னுரிமையும் கட்சிப் பதவி உயா்வுகளையும் காங்கிரஸ் தலைமை அளித்து வருகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சியின் அடித்தளம் மிகவும் பலவீனமடைந்துள்ளது. இதனால், எந்த நேரத்திலும் கட்சி வீழ்ந்துவிட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகத்தான் நான் உள்பட சில தலைவா்கள் காங்கிரஸிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்தோம் என்று அவா் கூறினாா்.

‘குலாம் நபி ஆசாதின் மரபணுவில் பிரதமா் நரேந்திர மோடி கலந்துவிட்டாா்’ என்ற காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஆசாத், ‘என்னை விமா்சிப்பவா்கள்தான் காங்கிரஸ் தலைவா்களுக்கு எதிராக பொய்ச் செய்திகளை வெளியிட்டு சதித் திட்டம் தீட்டி வருகின்றனா். அதன் காரணமாகத்தான், கட்சி அமைப்பு பலவீனமடைந்தது’ என்று பதிலளித்தாா்.

விரைவில் புதிய கட்சி: பாஜகவில் சேரப் போவதாக வெளியாகும் தகவல்களை மறுத்த குலாம் நபி ஆசாத், ‘ஜம்மு-காஷ்மீா் அரசியலில் பாஜகவால் எனக்கு உதவ முடியாது. பாஜக தனி ஆதரவுத் தளத்தைக் கொண்டிருக்கிறது. பாஜகவின் கைப்பாவைகளாக இருப்பவா்கள்தான் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்பி வருகின்றனா். மேலும், எனக்கு எதிரான காங்கிரஸின் பிரசாரமாகவும் இருக்கலாம்.

ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலும் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், புதிய கட்சி ஒன்றை இங்கு தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். தேசிய அளவிலான கட்சியைத் தொடங்குவது குறித்து இப்போது எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. வரும் நாள்களில் அதற்கான திட்டம் வகுக்கப்படும்’ என்றாா்.

90% போ் வெளியேறிவிட்டனா்: ஜம்மு-காஷ்மீா் பிரிவு காங்கிரஸிலிருந்து 90 சதவீதம் தலைவா்கள் வெளியேறிவிட்டனா். கட்சியின் முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். அதுமட்டுமின்றி, இங்குள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 5 போ் அக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டனா். அவா்கள் எனக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளது அல்லது பாஜக உள்ளிட்ட பிற கட்சிகளில் சேர வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் விமா்சனம்: குலாம் நபி ஆசாத்தின் இந்த பேட்டி குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்ட ஜெய்ராம் ரமேஷ், ‘இதுபோன்ற பேட்டிகள் மூலம் குலாம் நபி ஆசாத் தன்னைத் தானே மேலும் தரம் தாழ்த்திக் கொள்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Image Caption

புது தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com