ஆம் ஆத்மி மீது நடவடிக்கை தேவை: ஆளுநருக்கு பாஜக எம்.பி.க்கள் கடிதம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பேரம் பேச முயன்றதாக குற்றம் சாட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக எம்.பி.க்கள் தில்லி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்
ஆம் ஆத்மிக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பேரம் பேச முயன்றதாக குற்றம் சாட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக எம்.பி.க்கள் தில்லி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் கடந்த சில நாள்களுக்கு முன் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

குறிப்பாக, ஆம் ஆத்மியின் தலைவர்களில் ஒருவரான திலீப் பாண்டே ‘பாஜக தில்லியைக் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. முதலில் 4 பேரிடம் பேரம் பேசிய பிறகு மேலும் 40 எம்எல்ஏக்களை விலை பேச  முயன்று வருகிறது’ எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தில்லியைச் சேர்ந்த மனோஜ் திவாரி, ஹர்ஷ் வர்தன், மீனாக்‌ஷி லேகி உள்ளிட்ட 7 பாஜக எம்.பி.க்கள்  அம்மாநில ஆளுநர் வினய் குமார் சக்சேனாவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அதில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாஜக பேரம் பேச முயன்றதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். மணீஷ் சிசோடியா, தனக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து பாஜவில் இணைந்தால் தங்கள் மேல் உள்ள வழக்குகளை ரத்து செய்வோம் என பேரம் பேசினர் எனக் கூறியுள்ளார். இவையெல்லாம், மதுபானக் கடைகளுக்கான உரிம முறைகேடு வழக்கிலிருந்து மக்களை திசைதிருப்பும் முயற்சிகள். அதனால், ஆம் ஆத்மியின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். உண்மை என்னவென்று தில்லிக்கும் நாட்டிற்கும் தெரிய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com