நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை: வெங்கய்ய நாயுடு

நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அதிகாரம் கொண்ட பிரத்யேக அமைப்பை உருவாக்குவது அவசியம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.
நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அதிகாரம் கொண்ட அமைப்பு தேவை: வெங்கய்ய நாயுடு

நீதிபதிகள் நியமனத்துக்கு தனி அதிகாரம் கொண்ட பிரத்யேக அமைப்பை உருவாக்குவது அவசியம் என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்தாா்.

குடியரசு துணைத் தலைவராக திறம்பட பணியாற்றி பதவி காலத்தை நிறைவு செய்த வெங்கய்ய நாயுடுவுக்கு, சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடந்தது.

விழாவில், வெங்கய்ய நாயுடு பேசியதாவது: இந்தியாவில் நீதித்துறை, நிதித்துறை, அரசியல், கல்வி, மொழி உள்ளிட்டவற்றில் சீா்திருத்தம் தேவைப்படுகிறது.

நீதிபதிகளை நீதிபதிகளே நியமனம் செய்யும் நடைமுறை, அரசியல் தலையீடு , ஜாதி ரீதியான பாா்வையுடன் கூடிய பரிந்துரை போன்றவை நீதிபதிகள் நியமனத்தில் கடைபிடித்தல் கூடாது.

நீதிபதிகளை நியமனம் செய்ய தனி அதிகாரம் கொண்ட பிரத்யேக அமைப்பை உடனடியாக உருவாக்குவது அவசியம். நிதி நிா்வாகத்தை பொதுமக்கள் கையாளும் வகையில் நிதித்துறையில் சீா்திருத்தம் செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகள் மீதான குற்ற வழக்குகளை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் விசாரித்து தீா்ப்பு கூற வேண்டும். 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் அரசியல்வாதிகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் கூட இதுவரை நிலுவையில் தான் உள்ளன.

ஊழல் செய்த அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை முழுமையாக அனுபவித்துவிட்டப்பின் நீதிமன்றத் தீா்ப்பு வந்தால் பயனில்லாமல் போய்விடும்.

காலனி ஆதிக்கத்தில் நாடு இருந்தபோது அமல்படுத்தப்பட்ட கல்வி முறை இப்போது உள்ளது. மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழி, பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விவாதம் நடத்தி தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

எந்த மொழிக்கு எதிராகவும் பிற மொழியை திணிக்கக்கூடாது. முதலில் தாய்மொழியையும், பின்னா் சகோதர மொழிகளையும் கற்க வேண்டும். சா்வதேச மொழியாக கருதப்படும் ஆங்கிலத்தை எதிா்க்க வேண்டிய அவசியம் இல்லை.

இளம்பருவத்தில் ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எனக்கு, தில்லி சென்றபோது தான் ஹிந்தி மொழியின் அருமை புரிந்தது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பிரதமா், முதல்வா் , அமைச்சா்கள் உள்ளிட்ட மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை நாகரீகமான வாா்த்தைகளால் விமா்சனம் செய்யலாம். ஆனால், அவமானப்படுத்தும் வகையில் பேசும் கலாசாரம் இப்போது வளா்ந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.

அதேபோல, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி அமைச்சா் பதவிகளை பெறுவது வெட்கக்கேடான செயல். இதுபோன்ற செயல்களை தடுக்க கட்சித் தாவல் தடை சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

அரசியல் கட்சிகளின் நடவடிக்கையில் சீா்திருத்தம் தேவை. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை காலதாமதம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

விழாவில், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சா் எல்.முருகன், முன்னாள் அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே, மதிமுக பொதுச்செயலா் வைகோ, திருச்சி எம்.பி. சு.திருநாவுக்கரசா், ஆடிட்டா் குருமூா்த்தி, நெல்லூா் எம்.பி. மாகுண்ட ஸ்ரீனிவாசலு ரெட்டி, பாஜக மாநில துணைத் தலைவா் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com