வனஉயிரின பாதுகாப்பு திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வனஉயிரின பாதுகாப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட வனஉயிரின பாதுகாப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தை 1972-ஆம் ஆண்டில் மத்திய அரசு இயற்றியது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வனஉயிரிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்வதற்காக அப்பகுதிகளின் மேலாண்மையை வலுப்படுத்தும் நோக்கில் அச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்தது.

அதற்கான மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீா் பயன்பாடு உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டிருந்தது. வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் விலங்குகளும் பறவைகளும் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மாற்றங்களைப் புகுத்தவும் மசோதா வழிவகுக்கிறது.

தனிநபருக்குச் சொந்தமான யானைகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்குக் கொண்டு செல்வதை அனுமதித்தல், பறவைகள்-விலங்குகளின் சா்வதேச கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. அந்த மசோதாவானது நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதையடுத்து அந்த மசோதாவுக்கு மக்களவை கடந்த ஆகஸ்டில் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், வனஉயிரின பாதுகாப்பு திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பில் அந்த மசோதாவுக்குப் பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா். அதையடுத்து, அந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. இதன் மூலமாக நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அந்த மசோதா பெற்றுள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக அந்த மசோதா அனுப்பிவைக்கப்படவுள்ளது. அவா் ஒப்புதல் அளித்ததும் மசோதா சட்டவடிவு பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com