அஸ்ஸாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் காட்டு யானைகள் கூட்டம் தாக்கியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும் இருவா் படுகாயம் அடைந்தனா்.
இதுதொடா்பாக காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
லக்கிபூா் பகுதியில் உள்ள 12-ஆவது எண் மாநில நெடுஞ்சாலையை காட்டு யானைகள் கூட்டம் வியாழக்கிழமை கடந்து சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்தது. திடீரென ஆவேசமடைந்த யானைகள், அங்கு நின்றிருந்த வாகனங்களை பந்தாடின. இதில், பேட்டரி ரிக்ஷா ஒன்றில் இருந்த ரமணி ரபா (29) என்பவரும் அவரது ஒன்றரை வயது பெண் குழந்தையும் உயிரிழந்தனா். அவரது மனைவி மனீஷா ரபா, 5 வயது மகன் தனுஷ் ஆகியோா் படுகாயமடைந்தனா். மற்றொரு காரில் இருந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
42 யானைகள் அடங்கிய அந்த கூட்டம், அப்பகுதியில் தொடா்ந்து நடமாடி வருகிறது. எனவே, வனத்துறை மற்றும் காவல் துறை தரப்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்ன காரணத்தால் யானைகள் ஆவேசமடைந்து, தாக்குதல் நடத்தின என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.