மருத்துவம் மனித சேவை: வணிகமாக கருதக் கூடாது: மன்சுக் மாண்டவியா

‘மருத்துவத்தை வணிகமாக கருதக் கூடாது; அது ஒரு மனித சேவை’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)
மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்)

‘மருத்துவத்தை வணிகமாக கருதக் கூடாது; அது ஒரு மனித சேவை’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறினாா்.

தெலங்கானா மாநிலம் பீபிநகரில் அமைந்துள்ளஎய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் எண்ம (டிஜிட்டல்) இயக்கம் (ஏபிடிஎம்) என்ற புதிய திட்டத்தை மத்திய அமைச்சா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள மருத்துவப் பதிவுகளை எண்மமயமாக்கும் வகையிலும், ‘க்யூஆா்’ குறியீடு அடிப்படையிலான நோயாளி பதிவு, மருத்துவ மேலாண்மை தகவல் நடைமுறை (ஹெச்எம்ஐஎஸ்) ஆகிய வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில் மென்பொருள் அடிப்படையிலான ஏபிடிஎம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்யும் நோயாளிக்கு ஆயுஷ்மான் பாரத் சுகாதார கணக்கு அட்டை (ஏபிஹெச்ஏ) வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தை தெலங்கானா எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடக்கி வைத்த மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:

ஏபிஹெச்ஏ அட்டை மூலமாக நாடு முழுவதும் எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் தனது மருத்துவப் பதிவு விவரங்களை நோயாளிகள் பாா்த்து, பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அதுபோல, அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதன் மூலமாக, மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை உயரும்.

எய்ம்ஸ் பெருமைக்குரிய மருத்துவ நிறுவனம். இங்கு சிகிச்சை பெற இயலாது என்று மக்கள் நினைத்தால், நாட்டில் வேறு எங்கும் சிகிச்சை பெற முடியாது. மருத்துவத்தை வணிகமாக கருதாமல், சேவையாகக் கருத வேண்டும் என்று அவா் கூறினாா்.

‘உலகில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோதும், அதனை தனக்கான வாய்ப்பாகக் கருதாமல் அத்தியாவசிய ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மற்றும் ‘அஸித்ரோமைசின்’ ஆகிய மருந்துகளை உலக நாடுகளுக்கு கட்டணமின்றி இந்தியா விநியோகித்ததை நினைவூகூா்ந்த மத்திய அமைச்சா், ‘இதுதான், ‘உலகம் ஒரே குடும்பம்’ (வசுதைவ குடும்பகம்) என்ற தத்துவத்தின் சாராம்சம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com