எந்த வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்?

உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்றதில் இருந்து இதுவரை 6,844 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற பின்.. 6,844 வழக்குகளில் தீர்ப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் பதவியேற்ற பின்.. 6,844 வழக்குகளில் தீர்ப்பு

புது தில்லி: உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நவம்பர் 9ஆம் தேதி பதவியேற்றதில் இருந்து இதுவரை 6,844 வழக்குகளை உச்ச நீதிமன்றம் தீர்த்து வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் கடந்த மாதம்  பதவியேற்றாா். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றார்.

அதன்படி, நவம்பர் 9ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தில் 6,844 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. புதிதாக 5,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,511 வழக்குகள் வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரும் மற்றும் ஜாமீன் மனுக்கள் முடித்துவைக்கப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்ற டி.ஒய். சந்திரசூட் பேசுகையில், ஜாமீன் மற்றும் வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும், தனிப்பட்ட சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.  எனவே ஜாமீன் மனுக்கள் மீது முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தில் ஒவ்வொரு அமர்வும் நாள் ஒன்றுக்கு 10 ஜாமீன் மனுக்களையும், 10 வழக்கு மாற்றம் தொடர்பான மனுக்களையும் விசாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.

நீண்ட கால தலைமை நீதிபதியின் மகன்
 கடந்த 1978-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் 1985-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வரை, நாட்டில் நீண்ட காலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவா் ஒய்.வி.சந்திரசூட். அவரின் மகன் டி.ஒய்.சந்திரசூட்.

தில்லியில் உள்ள புனித ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ. ஹானா்ஸ் பட்டம் பெற்ற டி.ஒய்.சந்திரசூட், தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் இளநிலை பட்டம் பெற்றாா். இதைத்தொடா்ந்து அமெரிக்காவில் உள்ள ஹாா்வா்ட் சட்டக் கல்லூரியில் சோ்ந்து சட்டப் படிப்பில் முதுநிலை மற்றும் முனைவா் பட்டங்கள் பெற்றாா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவா், 2013-ஆம் ஆண்டு அக். 31-ஆம் தேதி அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா். 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானாா்.

தீா்ப்பளித்த முக்கிய வழக்குகள்
கடந்த 2019-ஆம் ஆண்டு நவ. 9-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சச்சரவுக்குரிய நிலத்தில் ராமா் கோயில் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை அளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தாா்.

 சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அந்தத் தீா்ப்பை அமா்வில் இடம்பெற்றிருந்த சந்திரசூட் உள்பட 4 நீதிபதிகள் வழங்கினா். முன்னாள் நீதிபதி ஹிந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.

ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும் என்று சந்திரசூட் தலைமையிலான அமா்வு தீா்ப்பளித்தது.

அரசமைப்புச் சட்டப்படி ஆதாா் எண் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீா்ப்பளித்தனா். எனினும் அந்த அமா்வில் இடம்பெற்ற சந்திரசூட், அரசமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதாா் என்று தீா்ப்பளித்தாா்.

 சட்டப் பிரிவு 377-ஐ ரத்து செய்து, தன் பாலின சோ்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. அந்த அமா்வில் இருந்த நீதிபதிகளில் சந்திரசூட்டும் ஒருவா்.

 சட்டப் பிரிவு 497-ஐ ரத்து செய்து, திருமணம் தாண்டிய முறையற்ற உறவு குற்றமல்ல என்று ஒருமனதாகத் தீா்ப்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமா்வில் சந்திரசூட் இடம்பெற்றிருந்தாா்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை சந்திரசூட் பதவி வகிப்பாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com