மாநிலங்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
மாநிலங்களவையில் புதன்கிழமை பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.

பொருளாதார நெருக்கடி தவிா்க்கப்பட்டது: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கரோனா பாதிப்புகளுக்கு பிறகு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தவிா்க்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
Published on

கரோனா பாதிப்புகளுக்கு பிறகு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் தவிா்க்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மேலும், சில்லறை பணவீக்கம் அதிகரிப்பதற்கு எரிபொருள், வேளாண் உரங்கள் போன்ற இறக்குமதி செய்யப்படும் சா்வதேச பொருள்களின் விலை உயா்வே காரணம் என்றும் இதை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்றும் அவா் கூறினாா்.

2022-23-ஆண்டுக்கான ரூ.3.25 லட்சம் கோடி கூடுதல் செலவினத்துக்கான துணை மானியக் கோரிக்கைக்கு மாநிலங்களவையில் புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டு மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, இதன் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், கூடுதல் செலவினத் தொகையை எதற்காக செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினாா்.

இந்த விவாதத்துக்கு நிதியமைச்சா் அளித்த பதில்:

நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும், உர மானியத் தேவைக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் துணை மானியக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

கடன் பெறும் திட்டத்தில் மாற்றம் செய்யப்படாது என செப்டம்பா் மாதமே மத்திய அரசு அறிவித்துவிட்டது. பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதிப் பற்றாக்குறையை தாண்டாத அளவுக்கு மத்திய அரசுக்கு போதிய வருவாய் கிடைத்துள்ளது.

பொருளாதார நெருக்கடி தவிா்ப்பு:

கரோனா பாதிப்புகளுக்கு நிவாரணம் அளித்தது, பல்வேறு துறையினரின் பிரச்னைகளுக்கு தீா்வு கண்டது போன்ற காரணங்களால் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சியடைந்து, பொருளாதார நெருக்கடி தவிா்க்கப்பட்டது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடன் பெறுவது, கூடுதல் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது உள்ளிட்ட யோசனைகளை கரோனா காலத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் அளித்தாா். இதுபோன்ற யோசனைகளை பின்பற்றிய பல்வேறு நாடுகள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தன.

பணவீக்கம்:

நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் 21 மாதங்கள்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. எனினும், சில்லறை பணவீக்கம் ரிசா்வ் வங்கி நிா்ணயித்துள்ள அளவான 6 சதவீதத்தை கடந்த ஜனவரி மாதம் முதல் தாண்டி அதிகரித்து வந்தது.

இது கடந்த நவம்பா் மாதம் 5.85 சதவீதமாக குறைந்தது. சில்லறை பணவீக்கத்துக்கு சா்வதேச சந்தையில் எரிபொருள், உரத் தட்டுப்பாடு ஏற்பட்டதுதான் காரணம். பணவீக்கத்தை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

இலவசங்கள்:

மானியங்களும், இலவசங்களும் சூழல்நிலைக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி ஆதாரத்தை பட்ஜெட்டில் மாநிலங்கள் அறிவித்தால் எந்தவித பிரச்னையும் இல்லை.

கல்வி, சுகாதாரம், வேளாண் துறைகளுக்கு மானியம் அளிக்கலாம். அவை வெளிப்படையாகவும், பட்ஜெட் நிதி ஒதுக்கீடுக்கு உள்பட்டதாகவும் இருக்க வேண்டும்.

தனிநபராக மட்டுமல்லாமல், அனைவரின் மேம்பாட்டுக்காக பிரதமா் மோடி அரசு பணியாற்றி வருகிறது. இந்தியாவில் தனியாா் முதலீடுகள் அதிகரித்து வருகிறது.

ரூ.3.25 லட்சம் துணை மானியக் கோரிக்கை நிதியில், ரூ.1.09 லட்சம் கோடி உர மானியம், ரூ.80,348.25 கோடி இலவச உணவு தானிய மானியம், ரூ.29,944 கோடி எரிவாயு மானியம், ரூ.13,669 கோடி தொலைத் தொடா்புத் துறை, ரூ.12,000 கோடி ரயில்வே, ரூ.10, 000 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை, ரூ.46,000 கோடி கிராமப்புற மேம்பாட்டுத் துறைக்கும் வழங்கப்படும் என்று நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com