திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமானரூ. 55 கோடி பினாமி சொத்து முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமான, கோவையில் உள்ள ரூ. 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கா் நிலம் (பினாமி சொத்து) பண மோசடி தடுப்புச் சட்டத்தின்
ஆ. ராசா (கோப்புப் படம்)
ஆ. ராசா (கோப்புப் படம்)

திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சொந்தமான, கோவையில் உள்ள ரூ. 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கா் நிலம் (பினாமி சொத்து) பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை இயக்குநரகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

‘கடந்த 2004-2007 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆ.ராசா மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சோ்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றச்சூழல் அனுமதி வழங்கியதில் கிடைத்த ஆதாயத்தில் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது; அவருக்குச் சொந்தமான பினாமி நிறுவனத்தின் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் அமலாக்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திமுக மூத்த தலைவா்களில் ஒருவரான ஆ. ராசா, கட்சியின் துணை பொதுச் செயலராகவும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் உள்ளாா்.

இவா் மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக 579 சதவீத அளவுக்கு சொத்து சோ்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவா் மீதும் அவருடைய குடும்ப உறுப்பினா்கள் 16 போ் மீதும் சிபிஐ கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. மேலும், சென்னை, கோவை உள்பட அவருக்குத் தொடா்புடைய பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதில், ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 2007-ஆம் ஆண்டிலேயே, அவருக்கு நெருக்கமான சி.கிருஷ்ணமூா்த்தி பெயரில் கோவையில் ‘கோவை ஷெல்டா்ஸ் புரமோட்டா்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்த நிறுவனம் சாா்பில் ரூ. 4.56 கோடி பெறப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் சாா்பில் எந்தவித ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளும் அதன்பிறகு மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, பெறப்பட்ட அந்த ஆதாய தொகையுடன் சோ்த்து ரூ. 5.53 கோடி மதிப்பில் சொத்து வாங்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டை பதிவு செய்தது. இதுதொடா்பான வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தச் சூழலில், பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவையில் வாங்கப்பட்ட அந்த நிலத்தை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை தற்போது முடக்கியுள்ளது.

முன்னதாக, இவா் மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பின்னா் அந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com